Published : 04 Aug 2022 06:51 AM
Last Updated : 04 Aug 2022 06:51 AM
திருச்சி/சேலம்: ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் உள்ளிட்ட காவிரியாற்றின் படித்துறைகள் மற்றும் கொள்ளிடம் ஆற்றின் கரைகளில் ஏராளமான பொதுமக்கள் நேற்று ஆடிப்பெருக்கு விழாவை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.
தமிழ் மாதங்களில் ஆடி மாதம் சிறப்பு வாய்ந்த மாதம் என்பதால், மாதம் முழுவதுமே அம்மன் கோயில்களில் உற்சவங்கள் நடைபெறும். அந்த வகையில் ஆடி மாதம் 18-ம் நாள் ஆடிப்பெருக்கு விழாவாகக் கொண்டாடப்படுகிறது. குறிப்பாக, இந்த விழா காவிரி ஆறு பாயும் பகுதிகளில் ஆண்டுதோறும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு காவிரி, கொள்ளிடம் மற்றும் கிளை ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்துள்ளதால், ஆடிப்பெருக்கு விழா களைக்கட்டியது. ஆடிப்பெருக்கையொட்டி நீர்நிலைகளில் பெண்கள் ஒன்றுகூடி கரையில் வாழை இலையில் அரிசி, பழங்கள், பனைஓலை கருகமணி, மஞ்சள், மஞ்சள் கயிறு ஆகியவற்றை வைத்து காவிரி தாய்க்கு படையலிட்டனர்.
பின்னர், மஞ்சள் கயிறை பெண்கள் ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டனர். புதுமணத் தம்பதிகள் திருமண மாலைகளை ஆற்றில் விட்டு, புதுத் தாலிக்கயிறு அணிந்து கொண்டனர்.
திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம், அய்யாளம்மன், கீதாபுரம், கருட மண்டபம், சிந்தாமணி ஓடத்துறை உள்ளிட்ட காவிரி ஆற்றின் படித்துறைகளில் ஏராளமான பெண்கள், பொதுமக்கள் தங்கள் குடும்பத்தினர், உறவினர்களுடன் கூடி வழிபாடு நடத்தினர்.
ஆறுகளில் நீரோட்டம் அதிகமாக இருப்பதால் திருச்சி மாவட்டத்தில் 55 இடங்களில் மட்டும் மக்கள் ஆடிப் பெருக்கு விழாவை கொண்டாட மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்திருந்தது. இந்த இடங்களில் போலீஸ் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
இதேபோல, தஞ்சாவூர், திருவையாறு, கும்பகோணம், மயிலாடுதுறை, நாகை உள்ளிட்ட பகுதிகளிலும் பொதுமக்கள் காவிரி, கொள்ளிடக் கரையோரங்களில் ஆடிப் பெருக்கு விழாவை விமரிசையாக கொண்டாடினர்.
மேட்டூர்
சேலம் மாவட்டம் மேட்டூர், பூலாம்பட்டி, கல்வடங்கம் உள்பட காவிரி கரையோர இடங்களில், கிராம மக்கள், தங்கள் குல தெய்வ கோயில்கள், ஊர் அம்மன் கோயில்கள் உள்ளிட்டவற்றின் உற்ஸவர் சிலைகள், வேல், ஈட்டி உள்ளிட்ட ஆயுதங்கள் போன்றவற்றை, மேளதாளத்துடன் ஊர்வலமாக காவிரிக்கு கொண்டு வந்து, புனித நீராட்டு செய்வித்தனர். தொடர்ந்து, காவிரி கரையில் வழிபாடு நடத்தி, மீண்டும் கோயிலுக்கு கொண்டு சென்றனர்.
இதேபோல், மேட்டூர் அணையை ஒட்டி அமைந்துள்ள பிரசித்தி பெற்றஅணைக்கட்டு முனியப்பன் கோயிலுக்கு, மேட்டூர், ஈரோடு, தருமபுரி மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் ஏராளமானோர் குடும்பத்துடன் வந்திருந்து, மேட்டூர் அணை கால்வாயில் புனித நீராடினர். புதுமணத் தம்பதிகள், இணையாக வந்திருந்து, திருமண மாலைகளை காவிரியில் விட்டு, காவிரித் தாயை வழிபட்டனர்.
ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறை மற்றும் கொடுமுடியில் வெள்ளப் பெருக்கு காரணமாக காவிரியில் நீராட பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
இதனால், ஏமாற்றமடைந்த பொதுமக்கள், கரைகளில் நின்று காவிரியை தரிசித்தனர். கரைகளில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த நீர் நிரப்பப்பட்ட தொட்டி மற்றும் செயற்கை ஷவர்களில் நீராடி, வழிபாடு நடத்தினர்.
கொடிவேரியில் வெள்ளப்பெருக்கு நீடித்ததால், அங்கும் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படவில்லை. பவானிசாகர் அணை நீர்மட்டம் 101 அடியாக இருந்த நிலையில், அணையைப் பார்வையிடவும், அனுமதி மறுக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT