

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் உள்ள ஜெனரேட்டர் மற்றும் பரிசோதனைக் கூடங்களை மழைக்கு முன்பாக முதல் தளத்துக்கு மாற்ற வேண்டும் என்று அரசு முதன்மைச் செயலரும், தொழில் முனைவோர் வளர்ச்சி நிறுவனத்தின் இயக்குநருமான ராஜாராமன் தெரிவித்தார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பருவ மழை முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நேற்று பல்லாவரத்தில் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் கஜலட்சுமி முன்னேற்பாடு பணிகள் குறித்து விளக்கினார். காவல்துறை சார்பில் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் விளக்கினார்.
பின்னர் ராஜாராம் பேசியதாவது: நகராட்சி மற்றும் பேரூராட்சிகள் சார்பில் வடிகால்கள் தூர்வரும்போது குப்பைகள் மற்றும் கழிவுகளை அப்புறப்படுத்தி வெளியில் கொண்டுபோய்ச் சேர்க்க வேண்டும். நீர்வரத்து கால்வாய் மற்றும் மழை நீர் வடிகால்கள் எளிதில் வடியும் வகையில் தூர்வாரப்பட்டு சுத்தம் செய்ய வேண்டும்.
மீன்வளத்துறையினர் படகுக ளையும், அதனை இயக்க தேவையான மீனவர்களையும் தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும். சுகாதாரத் துறை சார்பில் தேவையான அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் இருப்பில் இருக்க வேண்டும். பாதிக்கப்படும் பொதுமக்களுக்கு மருத்துவர்கள் உடனடியாக சேவை புரியக் கூட அளவில் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
அரசு மருத்துவமனைகளில் ஜெனரேட்டர், பரிசோதனைக்கூடம், சிகிச்சை அளிக்கும் பிரிவுகள் உள்ளிட்ட எதுவும் தரைதளத்தில் இருக்கக் கூடாது. இவைகளை மழை தொடங்குவதற்கு முன்பே முதல் தளத்துக்கு மாற்ற வேண்டும்.
தீயணைப்புத் துறை தேவையான உபகரணங்களை வாங்கி வைத்துக் கொள்ளவேண்டும்.
அத்தியாவசிய பொருட்கள்
காஞ்சிபுரம் மாவட்ட காவல் நிர்வாகம் சென்னை மாநகர காவல் நிர்வாகத்துடன் இணைந்து செயல்பட வேண்டும். பேரிடர் காலங்களில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய போதுமான அளவு அத்தியாவசிய பொருட்கள் இருப்பு வைக்க வேண்டும் என்றார்.
இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முத்தரசி, மாவட்ட வருவாய் அலுவலர் சவுரிராஜன், வேலைவாய்ப்பு துறை செயலர் அமுதா, ஆத்திராவிடர் நலத்துறை இயக்குநர் சிவசண்முகராஜா, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநர் சிவசண் முகராஜா, காவல்துறை துணை ஆணையர்கள், கோட்டாட்சியர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.