

சென்னை: அல்-காய்தா தலைவர் அமெரிக்க படைகளால் கொல்லப்பட்டதன் எதிரொலியாக சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்துக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அல்-காய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் கடந்த 2011-ல் பாகிஸ்தானில் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார். இதையடுத்து அல்-காய்தாவின் புதிய தலைவராக அய்மான் அல் ஜவாஹிரி பொறுப்பேற்றார்.
கடந்த 2001-ல் அமெரிக்காவில் அல்-காய்தா நடத்திய தாக்குதலில் சுமார் 3 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை ஒருங்கிணைத்ததில் அல் ஜவாஹிரி உதவியுள்ளார். எகிப்து நாட்டைச் சேர்ந்த அவரது தலைக்கு அமெரிக்கா 2.50 கோடி டாலர் வெகுமதி அறிவித்தது.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் உள்ள காபூலில், ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தி அய்மான் அல் ஜவாஹிரி கொல்லப்பட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
இதற்கிடையே, சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்துக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதன்படி, 2 வஜ்ரா வாகனங்களை முன்னிறுத்தி 50 ஆயுதப்படை போலீஸார் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். தூதரகம் அருகில் உள்ள அண்ணா மேம்பாலத்தில் உள்ள 4 பாதுகாப்பு போஸ்டுகளிலும் தலா 4 ஆயுதப்படை காவலர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் தொலைநோக்கி கருவி மூலமும் கண்காணிக்கின்றனர்.
அல்-காய்தா தலைவர் கொல்லப்பட்டதன் எதிரொலியாக அசம்பாவித நிகழ்வுகள் ஏதும் நிகழ்ந்து விடக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமெரிக்க துணை தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.