

கல்பாக்கம்: மாமல்லபுரத்தை அடுத்த பூஞ்சேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு சென்னை அணுமின் நிலையம் சார்பில் ரூ.60.68 லட்சம் மதிப்பில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் அமைப்பதற்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது.
மாமல்லபுரத்தை அடுத்த பூஞ்சேரி பகுதியில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடம் அமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதைத் தொடர்ந்து சென்னை அணுமின் நிலையம் சார்பில் இந்த கிராமத்தில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் அமைக்க சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் ரூ.60.68 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதன்பேரில், கூடுதல் வகுப்பறை கட்டிடம் அமைப்பதற்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது. இதில், சென்னை அணுமின் நிலைய இயக்குநர் சுதிர் பாபன்ராவ் ஷெல்கே பங்கேற்று கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
இதையடுத்து, வகுப்பறை கட்டிடங்கள் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில், முதன்மை கண்காணிப்பாளர் செந்தாமரக்ஷன், சமூக பொறுப்பு குழு தலைவர் சுபாமூர்த்தி, மருத்துவ அலுவலர் அறவாழி அண்ணல், உறுப்பினர் செயலர் ஜெகன், பேரூராட்சி தலைவர் வளர்மதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.