Published : 04 Aug 2022 07:28 AM
Last Updated : 04 Aug 2022 07:28 AM

போக்குவரத்துக் கழக ஊழியர்களின் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டவில்லை: அமைச்சர் சிவசங்கர் தகவல்

சென்னை: போக்குவரத்துக் கழக ஊழியர்களின் ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. எனினும், தொழிற்சங்கத்தினரின் பெரும்பாலான கோரிக்கைகளை ஏற்கப்பட்டிருப்பதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கான, 14-வது ஊதிய ஒப்பந்த ஆறாம் கட்ட பேச்சுவார்த்தையானது, போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தலைமையில் சென்னை, குரோம்பேட்டையில் உள்ள மாநகர போக்குவரத்துக் கழக பயற்சி மைய வளாகத்தில் நேற்று நடந்தது.

அங்கு, 60-க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்க நிர்வாகிகள் மற்றும் போக்குவரத்துக் கழக உயரதிகாரிகளுடன் சுமார் 6 மணி நேரத்துக்கு மேலாக அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது: போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு பே மேட்ரிக்ஸ் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என ஒப்புக் கொள்ளப்பட்டது. அதனை எந்த காலகட்டத்தில் இருந்து தருவது, எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை பேச்சுவார்த்தை நடைபெறுவது உள்ளிட்டவை குறித்து பேசப்பட்டன.

தொழிற்சங்கத்தினரின் கோரிக்கையை நிறைவேற்றும் பட்சத்தில் கூடுதல் நிதிச்சுமை ஏற்படும். இதற்கு நிதித்துறையின் ஒப்புதல் பெற வேண்டியுள்ளது. இதனால் ஊதிய ஒப்பந்தம் எட்டப்படவில்லை.

எனினும், அவர்களது பெரும்பாலான கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது. அதற்கு தொழிற்சங்கத்தினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும். அதிமுக ஆட்சியில் ஏற்பட்ட ஊதிய முரண்பாடு களையப்படும்.

போக்குவரத்துத் துறைக்கு அரசு பல்வேறு வழிகளில் உதவுகிறது. டீசல் விலை உயர்ந்த போதிலும் பயணச்சீட்டு கட்டணம் உயர்த்தப்படவில்லை. இலவச திட்டங்களுக்கு அரசு நிதி வழங்குவதால் போக்குவரத்துத் துறைக்கு நஷ்டம் இல்லை. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

பின்னர் தொமுச பேரவை பொதுச் செயலாளர் மு.சண்முகம் எம்.பி. கூறியதாவது: 2019-ம் ஆண்டு, செப்.1-ம் தேதி முதல் 5 சதவீத ஊதிய உயர்வு, போராட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு தண்டனை ரத்து, படித்தொகை வழங்குதல், பொதுவான நிலையாணைக்கு குழு, பழைய ஓய்வூதிய திட்ட பிரச்சினைக்கு தீர்வு உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒப்பந்தம் என்னும் நடைமுறை தொடர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம். ஓய்வூதியர்களுக்கு நிலுவை பஞ்சப்படி வழங்க வலியுறுத்தினோம். 99 சதவீதம் ஊதிய பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இருந்தது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஒப்பந்தத்தை இறுதி செய்ய கோரிக்கை

வேலைநிறுத்தம் குறித்து சிஐடியு தொழிற்சங்கத்தினரிடம் கேட்டபோது, “பெரும்பாலான கோரிக்கைகள் ஏற்கப்பட்டதால் ஆக.3-ம் தேதிக்குப் பிறகு திட்டமிட்ட வேலைநிறுத்தம் தள்ளிவைக்கப்படுகிறது.

விரைவில் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடத்தி, ஒப்பந்தம் இறுதி செய்யப்படாவிட்டால் வேலைநிறுத்தம் நடைபெறும்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x