Published : 25 Oct 2016 09:29 AM
Last Updated : 25 Oct 2016 09:29 AM

திராவிடர் கழகம் சார்பில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா: கி.வீரமணி, தா.பாண்டியன் பங்கேற்பு

திராவிடர் கழகம் சார்பில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா சென்னை வேப்பேரி பெரியார் திடலில் நேற்று நடந்தது. ‘தந்தை பெரியாரும், எம்ஜிஆரும்’ என்ற நூலை வெளியிட்டு தி.க. தலைவர் கி.வீரமணி பேசியதாவது:

எம்ஜிஆருக்கு திராவிடர் கழகம் நூற்றாண்டு விழா நடத்துவதா என பலரும் ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்புகின்றனர். இதில் ஆச்சரியப்பட எதுவும் இல்லை. திராவிடர் கழகம் என்ற வேரில் இருந்து கிளர்ந்தெழுந்து ஆலமரமாக வளர்ந்தவர் எம்ஜிஆர். பெரியார் என்ற பள்ளியில் படித்து தேர்ந்தவர்.

இதே பெரியார் திடலில் பெரி யார் விழாவில் பேசிய எம்ஜிஆர் தனது வளர்ச்சியில் பெரியாரின் பங்களிப்பை விவரித்தார். கலை வாணர் என்.எஸ்.கிருஷ்ணன், பெரியாரின் குடியரசு இதழை படிக்கச் சொன்னதையும், அது தன் வாழ்வில் ஏற்படுத்திய மாற்றத்தையும் பெருமையாகச் சொன்னார். அதனால் அந்த உரையை மீண்டும் நூலாக வெளியிட்டுள்ளோம்.

சமூக நீதியைக் காப்பாற்றியவர் எம்ஜிஆர். அவரது ஆட்சியில் இடஒதுக்கீடு பெற ரூ.9 ஆயிரம் வருமான உச்சவரம்பு கொண்டு வரப்பட்டது. இதை எதிர்த்து திராவிடர் கழகம் போராடியது. எங்கள் கோரிக்கையை ஏற்று, அதை ரத்து செய்ததுடன், 31 சதவீதமாக இருந்த இடஒதுக்கீட்டை 50 சதவீதமாக உயர்த்தினார். இது தற்போது 69 சதவீதமாக உள்ளது. இதற்கு சட்டப் பாதுகாப்பு வழங்கியவர் முதல்வர் ஜெயலலிதா. இதற்காக எம்ஜிஆர், ஜெயலலிதா இருவருக்கும் பாராட்டு விழா நடத்தினோம். சமூக நீதி காத்த வீராங்கனை என ஜெயலலிதாவுக்கு பட்டம் வழங்கினோம்.

ஆனால், இப்படிப்பட்ட பகுத்தறிவாளர் எம்ஜிஆரை இந்து என்றும், இந்துத்துவ கொள்கைகளை பின்பற்றியவர், பரப்பியவர் என ஆர்எஸ்எஸ் பத்திரிகை எழுதியுள்ளது.

திருவள்ளுவர், ராஜேந்திர சோழன் மூலம் இங்கே வளர நினைத்து தோல்வி அடைந்தவர்கள் எம்ஜிஆர் மூலம் வளர நினைக்கிறார்கள். எம்ஜிஆரை அபகரிக்கப் பார்க்கிறார்கள். இதை முறியடிப்பதற்காகவே திராவிடர் கழகம் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுகிறது.இவ்வாறு கி.வீரமணி கூறினார்.

இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா.பாண்டியன், அமெரிக்காவில் எம்ஜிஆர் சிகிச்சை பெற உதவிய தொழிலதிபர் பழநி ஜி.பெரியசாமி, திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி பூங்குன்றன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x