Published : 12 Oct 2016 11:48 AM
Last Updated : 12 Oct 2016 11:48 AM

தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிப்பீர்: ராமதாஸ்

காவிரி பாசன மாவட்டங்களையும், சென்னை தவிர்த்த தமிழகத்தின் பிற மாவட்டங்களையும் வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவிக்க வேண்டும். உச்சவரம்பு இல்லாமல் அனைத்து விவசாயிகளின் பயிர்க்கடனையும் முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில், "காவிரி பாசன மாவட்ட விவசாயிகள் மலை போல் நம்பியிருந்த காவிரி நீர் இந்த ஆண்டு சம்பா சாகுபடிக்கும் முழுமையாக கிடைக்காது என்பது படிப்படியாக உறுதியாகி வருகிறது.

கர்நாடகத்தில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் கிடைப்பதற்கான வாய்ப்புகள் குறைந்து வருவதால் காவிரி பாசன மாவட்டங்களில் 16லட்சம் ஹெக்டேரில் பயிரிடப்பட்டுள்ள சம்பா பயிர்கள் கருகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

தஞ்சாவூர், திருவாரூர், நாகை, அரியலூர், திருச்சி, கடலூர், புதுக்கோட்டை ஆகிய 7 மாவட்டங்களில் மட்டும் 14.47 லட்சம் ஹெக்டேரில் சம்பா சாகுபடி செய்யப்படுவது வழக்கம். இந்த ஆண்டில் கிட்டத்தட்ட 2 லட்சம் ஹெக்டேரில் நிலத்தடி நீரை நம்பி சம்பா சாகுபடி செய்யப்படுகிறது. மேலும் 12 லட்சம் ஹெக்டேரில் நேரடி விதைப்பு மூலம் சம்பா நெற்பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன. இம்மாவட்டங்களைத் தவிர காவிரி பாயும் மற்ற மாவட்டங்களில் சுமார் 2 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் சம்பா நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டிருக்கிறது. இந்த பயிர்களை வெற்றிகரமாக அறுவடை செய்ய ஜனவரி மாத இறுதி வரை காவிரியில் தண்ணீர் வர வேண்டியது அவசியமாகும். ஆனால், அதற்கு வாய்ப்பு இல்லை.

சம்பா சாகுபடிக்காக கடந்த செப்டம்பர் மாதம் 20-ஆம் தேதி முதல் தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. வினாடிக்கு 12,000 கனஅடி மட்டுமே தண்ணீர் திறக்கப்படுவதால் கடைமடை பகுதிகளுக்கு இன்னும் தண்ணீர் சென்றடையவில்லை. வினாடிக்கு குறைந்தபட்சம் 20,000 கனஅடி தண்ணீராவது காவிரியில் திறந்து விடப்பட்டால் மட்டுமே கடைமடை பாசனப் பகுதிகளை காவிரி நீர் சென்றடையும்.

அதேநேரத்தில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. இன்றைய நிலவரப்படி மேட்டூர் அணையில் 32 டி.எம்.சி தண்ணீர் மட்டுமே உள்ளது. மேட்டூர் அணையில் சுமார் 20 டி.எம்.சி தண்ணீர் அத்தியாவசியத் தேவைகளுக்காக இருப்பு வைக்கப்பட வேண்டும்.

மீதமுள்ள தண்ணீரைக் கொண்டு இப்போதுள்ள அளவிலேயே தண்ணீர் திறந்து விடப்பட்டால் அடுத்த 12 நாட்களுக்கு மட்டுமே தண்ணீர் வழங்க முடியும். கடைமடைப் பாசனப் பகுதிகளுக்கும் தண்ணீர் செல்ல வசதியாக வினாடிக்கு 20,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டால் அடுத்த 6 நாட்களுக்கு மேல் நீர் திறக்க முடியாது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இம்மாத இறுதியில் தான் மிகவும் தாமதமாக பெய்யத் தொடங்கும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி வடகிழக்கு பருவமழை தொடங்கும் வரை கூட மேட்டூர் அணையிலிருந்து சம்பா சாகுபடிக்காக தண்ணீரை திறந்துவிட முடியாத நிலைமை ஏற்பட்டிருக்கிறது. வட கிழக்கு பருவமழையே பெய்தாலும் அதனால் பெரிய அளவில் பயன் கிடைக்காது.

ஒருவேளை காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து மேட்டூர் அணையின் நீர்மட்டம் அதிகரித்தால் மட்டுமே காவிரி பாசன மாவட்டங்களில் சம்பா சாகுபடிக்கு பயனுள்ளதாக அமையும். இப்போதைய நிலையில், கர்நாடக அணைகளில் இருந்து கணிசமான அளவு தண்ணீர் திறந்துவிடப்பட்டால் மட்டும் தான் காவிரிபாசன மாவட்டங்களில் கருகத் தொடங்கியிருக்கும் சம்பா பயிரை ஓரளவாவது காப்பாற்ற முடியும்.

ஆனால், கர்நாடக அணைகளின் நீர் இருப்பு 24 டி.எம்.சிக்கும் கீழ் குறைந்தால் உச்ச நீதிமன்றமே ஆணையிட்டாலும் தமிழகத்திற்கு காவிரியில் ஒரு சொட்டு கூட தண்ணீர் திறந்து விட முடியாது என கர்நாடக முதல்வர் சித்தராமய்யா கூறியிருக்கிறார். கர்நாடக அணைகளில் 26 டி.எம்.சி மட்டுமே தண்ணீர் உள்ள நிலையில் தமிழகத்திற்கு தண்ணீர் கிடைப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாகும்.

தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடும்படி உச்ச நீதிமன்றம் ஆணையிட்டு, அதை கர்நாடகம் செயல்படுத்த மறுத்தால், மத்திய அரசு தலையிட்டு கர்நாடகத்திற்கு உரிய வழிகாட்டுதல்களை வழங்கினாலாவது தமிழகத்திற்கு ஏதேனும் நீதி கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

ஆனால், மத்திய அரசோ, உள்ளூர் அரசியல் காரணங்களுக்காக, கர்நாடக அரசின் ஊதுகுழலாக செயல்படுவதால் தமிழகத்திற்கு நீர் கிடைக்க வாய்ப்பில்லை. மத்திய அரசு அமைத்துள்ள வல்லுனர் குழு அறிக்கையும் தமிழ்நாட்டிற்கு சாதகமாக இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகைய சூழலில் சம்பா பயிர்களை காப்பாற்ற முடியாது.

எனவே, காவிரி பாசன மாவட்டங்களையும், சென்னை தவிர்த்த தமிழகத்தின் பிற மாவட்டங்களையும் வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவிக்க வேண்டும். உச்சவரம்பு இல்லாமல் அனைத்து விவசாயிகளின் பயிர்க்கடனையும் முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்.

கடந்த 6 ஆண்டுகளாக குறுவைப் பயிர் சாகுபடி செய்ய முடியாததுடன், இந்த ஆண்டு சம்பா சாகுபடியும் வெற்றி பெற சாத்தியமில்லாததால் பாதிக்கப்பட்ட உழவர்களுக்கு ஏக்கருக்கு ரூ.25,000 வீதமும், நிலமற்ற கூலித் தொழிலாளர்களுக்கு ஒருமுறை உதவியாக ரூ.25,000 இழப்பீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்"

இவ்வாறு ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x