

சென்னையில் ஆளுநர் மாளி கையை முற்றுகையிடச் சென்ற தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் உட்பட 600 பேர் கைது செய்யப் பட்டனர்.
காவிரி விவகாரத்தில் மத்திய அரசைக் கண்டித்து ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடத்தப்போவதாக தமிழக வாழ்வு ரிமை கட்சி தலைவர் வேல்முருகன் அறிவித்திருந்தார். அதன்படி, கிண்டி ரேஸ்கோர்ஸ் பேருந்து நிறுத்தம் அருகில் இருந்து நேற்று காலை ஆளுநர் மாளிகை நோக்கி ஏராளமான தொண்டர்களுடன் பேரணியாக புறப்பட்டார். அப்போது செய்தியாளர்களிடம் வேல்முருகன் கூறியதாவது:
தமிழகத்துக்கு ஒரு சொட்டு நீர்கூட தரக்கூடாது என்று மத்திய அமைச்சர் சதானந்த கவுடா கூறுகிறார். கர்நாடக அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும் கலந்துகொள்கிறார்.
இதையெல்லாம் மத்திய அரசு தட்டிக் கேட்கவில்லை. கர்நாடகாவுக்கு கண்டனம் தெரி விக்கவில்லை. கர்நாடகாவில் தமிழர்களின் சொத்துகள் சூறை யாடப்பட்டன. பேருந்துகள் எரிக்கப் பட்டன. வணிக வளாகங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. பல ஆயிரம் கோடி சேதமாகியும், இரு மாநில மக்களும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்கிறார் பிரதமர் மோடி.
காவிரியில் தமிழகத்துக்கு உரிய நீர் திறக்க மத்திய அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைப்போம் என்று கூறிவிட்டு, பின்னர் அரசியல் லாபத் துக்காக, முடியாது என்று கூறிய மத்திய அரசைக் கண்டிக்கிறோம். மத்திய அரசின் தமிழர் விரோதப் போக்கை, தமிழகத்தை வஞ்சிக்கும் போக்கை கண்டித்து, மத்திய அரசின் பிரதிநிதியான ஆளுநரின் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துகிறோம். உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக செயல்பட்ட கர்நாடக அரசைக் கலைக்க வேண்டும்.
இவ்வாறு வேல்முருகன் கூறினார். அவர் உட்பட 600 பேரை கிண்டி போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.