

சென்னை: குடிநீர் பாட்டில் தயாரிக்க ஆவின் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஆவின் பாக்கெட்டுகளில் சினிமா விளம்பரங்களை அனுமதிப்பது தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் ஆவின் மூலம் பால் மற்றும் பால் பொருட்கள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஆவின் மூலம் குடிநீர் பாட்டில் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் ஆவின் பால் தயாரிக்கும் 28 யூனிட்களிலும் தண்ணீர் பிளான்ட் (R.O Plant) உள்ளது. இங்கிருந்து குடிநீர் பாட்டில் தயாரிக்க ஆவின் திட்டமிட்டுள்ளது. தற்போது தண்ணீர் பாட்டில் மற்றும் லேபிள் போன்ற வடிவமைப்புகளை இறுதி செய்யும் பணி நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி 1 லிட்டர் மற்றும் அரை லிட்டர் தண்ணீர் பாட்டில்கள் தயாரிக்க தொடர் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரியவந்துள்ளது.
அதேபோல், அரசு விளம்பரங்கள் மற்றும் சிறப்பு நாட்கள் தொடர்பான புகைப்படம், விளம்பரங்கள் ஆவின் பாக்கெட்டுகளில் இடம்பெற்று வரும் நிலையில், சினிமா படங்களின் விளம்பரங்களையும் வெளியிடுமாறு திரைத் துறையினர் கேட்டு வருவதாகவும், திரைப்படங்களின் விளம்பரங்களை வெளியிடுவது குறித்து ஆவின பரிசீலனை செய்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.