Published : 03 Aug 2022 09:50 AM
Last Updated : 03 Aug 2022 09:50 AM

தெள்ளார் அரசு மகளிர் உயர்நிலை பள்ளி கட்டிடத்தால் மாணவிகளுக்கு ஆபத்து

வந்தவாசி அடுத்த தெள்ளார் அரசு மகளிர் உயர்நிலை பள்ளியில் சேதமடைந்துள்ள பள்ளி கட்டிடம். உள்படம்: சிமென்ட் பூச்சு பெயர்ந்து விழுந்த கழிப்பறையின் மேற்கூரை.

தெள்ளார் அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியின் கட்டிடம் சேதமடைந்து உள்ளதால் மாணவிகளுக்கு ஆபத்து என பொதுமக்கள் எச்சரித்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த தெள்ளாரில் உள்ள அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியில் 280 மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இவர்களுக்கு 10 வகுப்பறைகளில் அமர வைக்கப்பட்டு கல்வி கற்பிக்கப்படுகிறது. இதில் 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட 2 காங்கிரீட் கட்டிடங்களில் 5 வகுப்பறைகளும், ஆசிரியர் ஓய்வறை கட்டிடத்தில் ஒரு வகுப்பறையும் இயங்கி வருகிறது.

மேலும் 4 வகுப்பறைகள், சுமார் 70 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டு, சிமென்ட் ஓடு வேய்ந்த கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இக்கட்டிடத்தின் சுவர்கள், பல இடங்களில் பெயர்ந்து சேதமடைந்துள்ளன. மேலும், சிமென்ட் ஓடுகளிலும் ஓட்டை விழுந்து சேதமடைந்துள்ளன.

சேதமடைந்த கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டித் தரக் கோரி பலமுறை கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். மேலும், கட்டிடம் இடிந்து விழுந்தால், மாணவிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என எச்சரித்துள்ளனர்.

சேதமடைந்து உபயோகமற்று பூட்டி வைக்கப்பட்டுள்ள மற்றொரு பழைய கட்டிடத்தை இடிக்க அனுமதி அளிக்கப்பட்டும், இதுவரை இடித்து அகற்றப் படாமலேயே உள்ளது. கழிப் பறைக்குச் செல்லும் வழியில் பழைய கட்டிடம் உள்ளதால் ஒவ்வொரு முறையும் மாணவிகள் அச்சத்துடன் கடந்து செல்கின்றனர்.

இந்நிலையில் 9-ம் வகுப்பு மாணவி ஒருவர், பள்ளியின் கழிப்பறைக்கு நேற்று முன் தினம் சென்றுள்ளார். அப்போது கழிப்பறை மேற்கூரையின் சிமென்ட் பூச்சு பெயர்ந்து விழுந்தது. இதில் அந்த மாணவிக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் வலியால் அவதிப்பட்டு வரும் மாணவி, பெரும் சிரமத்துடன் நேற்று பள்ளிக்கு வந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த தெள்ளார் ஒன்றியக்குழுத் தலைவர் கமலாட்சி இளங்கோவன் பள்ளிக்கு சென்று அந்த மாணவியை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

மேலும் மேற்கூரை சிமென்ட் பூச்சு பெயர்ந்து விழுந்த கழிப்பறையை உடனடியாக பூட்டுமாறும், உடனடியாக மாற்று ஏற்பாடு செய்யுமாறும் தெள்ளார் ஒன்றிய பொறியியல் பிரிவு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தெள்ளாரில் உள்ள அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியில் 280 மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x