அதிமுக கவுன்சிலர் கொலையில் கைதான 4 பேர் சிறையில் அடைப்பு: திருத்தணி போலீஸார் நவடிக்கை

அதிமுக கவுன்சிலர் கொலையில் கைதான 4 பேர் சிறையில் அடைப்பு: திருத்தணி போலீஸார் நவடிக்கை
Updated on
1 min read

திருத்தணி நகராட்சியின் அதிமுக 13-வது வார்டு கவுன்சிலர் ஆப்பிள் ஆறுமுகம் என்கிற கே.ஆறுமுகம் (42). கடந்த 9-ம் தேதி காரில் சென்ற அவரை வழி மறித்து, மர்ம கும்பல் வெட்டிக் கொன்றது. இதையடுத்து மறியல், கல்வீச்சு, தடியடி உள்ளிட்ட சம்பவங்களால் அங்கு பதற்றம் நிலவியது. கொலையாளிகளை திருத்தணி போலீஸார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

இந்நிலையில், இக்கொலை தொடர்பாக திருத்தணி அக்கையா நாயுடு சாலையைச் சேர்ந்த ராஜேஷ் என்ற ராஜேஷ்குமார், ஆட்டோ ஓட்டுநரான ஜாகீர் என்ற ஜாகீர் உசேன், காந்தி ரோடு 3-வது தெருவைச் சேர்ந்த பிரேம் என்ற பிரேம்குமார், திருத்தணி சுப்பிரமணிய நகர்- கம்பர் தெருவைச் சேர்ந்த சின்னசாமி ஆகிய 4 பேரை நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். அவர்களை திருத்தணி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நேற்று புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.

இவர்களிடம் போலீஸார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக கூறப்படுவதாவது:

கவுன்சிலர் ஆறுமுகம் ஆந்திர பகுதியில் இருந்து மதுபாட்டில்களை வாங்கி வந்து திருத்தணியில் விற்பனை செய்து வந்ததால், திருத்தணி பகுதியைச் சேர்ந்த திமுக பிரமுகர் ஒருவருடன் மோதல் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், அந்த பிரமுகருக்கும், கவுன்சிலர் ஆறுமுகத்துக்கும் நிலம் தொடர்பாகவும் முன் விரோதமும் இருந்து வந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு திமுக பிரமுகரை கவுன்சிலர் ஆறுமுகம் கொலை செய்ய முயற்சித்துள்ளார். இதற்கு பழி தீர்க்கவே சதித் திட்டம் தீட்டப்பட்டு கவுன்சிலர் ஆறுமுகம் கொலை செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கூறப்படுகிறது.

எனவே, ஆறுமுகம் கொலையில் சம்பந்தப்பட்ட முக்கிய குற்றவாளியான திமுக பிரமுகர் உள்ளிட்ட சிலரை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். அவர்கள் சிக்கினால்தான் கொலை தொடர்பான முழுமையான காரணங்கள் தெரியவரும் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in