Last Updated : 03 Aug, 2022 12:45 PM

 

Published : 03 Aug 2022 12:45 PM
Last Updated : 03 Aug 2022 12:45 PM

‘பொ.செ.’, ‘விக்ரம்’, ‘புஷ்பா’ கெட்டப்பில் புதுச்சேரி முதல்வர் பிறந்தநாள் பேனர்கள் - பேனர் தடைச் சட்டம் மீறல்

சென்னை: புதுச்சேரியில் பேனர் தடைச் சட்டம் இருந்தும் பிறந்தநாளையொட்டி நகரெங்கும் முதல்வர் ரங்கசாமிக்கு அவரது ஆதரவாளர்கள் தற்போதைய திரைப்பட நட்சத்திரங்கள் ஸ்டைலில் பேனர்கள் வைத்துள்ளனர். குறிப்பாக ‘பொன்னியின் செல்வன்’, ‘விக்ரம்’, ‘புஷ்பா’ திரைப்பட ஹீரோக்கள் கெட்டப்பில் ரங்கசாமியை அவரது தொண்டர்கள் வடிவமைத்துள்ளனர்.

1950-இல் ஆகஸ்ட் 4-ஆம் தேதி பிறந்தவர் ரங்கசாமி. நடிகர் சிவாஜியின் தீவிர ரசிகர். இளம் வயதில் காமராஜருக்கு மன்றமும் நிறுவியவர். ஆண்டுதோறும் முதல்வர் ரங்கசாமியின் பிறந்தநாளை என்.ஆர்.காங்கிரஸ் நிர்வாகிகளும், தொண்டர்களும், அவரது ஆதரவாளர்களும் கொண்டாடுவது வழக்கம். தற்போது முதல்வராக இருப்பதாலும், கரோனா தொற்று காலங்களுக்கு பிறகு வருவதாலும் கடந்த சில ஆண்டுகளை விட இம்முறை அதிக சிறப்பாக அவரது ஆதரவாளர்கள் பிறந்தநாளை கொண்டாட திட்டமிட்டுள்ளனர்.

இதையொட்டி கோயில்களில் சிறப்பு பூஜை, அன்னதானம், மரகன்றுகள் நடுதல், மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள், ரத்த தான முகாம் என பல்வேறு பணிகளை செய்ய திட்டமிட்டுள்ளனர். அதற்கு முன்னோட்டமாக நகரின் பல்வேறு பகுதிகளில் ரங்கசாமிக்கு வாழ்த்து தெரிவிக்கும் வண்ணம் என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் பேனர்கள், கட்—அவுட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

வழக்கமாக அரசியல் கட்சி தலைவர்களை தொண்டர்கள் அவருடைய உருவப் படங்களை மட்டுமே பேனர்களில் பயன்படுத்தி வாழ்த்து தெரிவிப்பது உண்டு. ஆனால், புதுவை முதல்வர் ரங்கசாமியை அவரது கட்சி தொண்டர்களும், ஆதரவாளர்களும் தங்கள் விருப்பம் போல் திரைப்பட நடிகர்கள் உருவங்களில் பேனர்கள் அமைத்து வாழ்த்து தெரிவிப்பது வழக்கம். அவரது பிறந்தநாள் வரும்போது பிரபலமாக இருக்கும் திரைப்பட பாணியில் பேனர்களை வடிவமைப்பார்கள்.

இம்முறை ‘பொன்னியின் செல்வன்’, ‘விக்ரம்’, ‘புஷ்பா’ திரைப்பட ஹீரோக்கள் ஸ்டைலில் ரங்கசாமியை வடிவமைத்து பேனர்கள் வைத்துள்ளனர். குறிப்பாக ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் குதிரையேறி வரும் கார்த்திக்கு பதிலாகவும், ‘விக்ரம்’ படத்தில் கமலுக்கு பதிலாகவும் என விதவிதமாக பேனர்கள் வைக்கின்றனர்.

இதுதொடர்பாக பொதுமக்கள் தரப்பில் கூறுகையில், "புதுச்சேரி முதல்வருக்கு சினிமா நடிகர் பாணியில் பேனர்கள் வைத்துள்ளனர். எந்த மாநிலத்திலும் இதுபோல் இல்லை. பொதுமக்கள் அவரை பார்க்கும் போது சினிமா நடிகரை போன்று பார்க்க வேண்டியுள்ளது. விபத்து ஏற்படும் வகையில் பல இடங்களில் பேனர்கள் வைக்கப்படுகின்றன.

புதுச்சேரியை அழகுப்படுத்தும் நோக்கில் போஸ்டர் பேனர்கள் போன்றவை வைக்க தடை 2009ல் விதிக்கப்பட்டது. பேனர் வைத்தால் கடும் நடவடிக்கையை கடந்த ஆட்சியில் எடுக்கப்பட்டது. தற்போது இதற்கான உள்ளாட்சித் துறையை வைத்துள்ள முதல்வர் ரங்கசாமி என்ன செய்வார்?" என்று கேள்வி எழுப்பினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x