Published : 03 Aug 2022 07:35 AM
Last Updated : 03 Aug 2022 07:35 AM

புதிய புத்தொழில், புத்தாக்க கொள்கை விரைவில் வெளியிடப்படும்; தமிழகத்தை புத்தொளி மாநிலமாக்குவோம்: மு.க.ஸ்டாலின் உறுதி

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் தமிழ்நாடு புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில் காப்பகங்கள் சந்திப்பு நிகழ்ச்சி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற தொழில் முனைவோர். உடன் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், துறை செயலர் வி.அருண் ராய், தொழில் ஆணையர் சிஜி தாமஸ் வைத்யன், தமிழ்நாடு புத்தொழில் புத்தாக்க இயக்கத்தின் இயக்குநர் மற்றும் முதன்மை செயல் அலுவலர் சிவராஜா ராமநாதன், ஐஎஸ்பிஏ அமைப்பின் தலைவர் கே.சுரேஷ் குமார், ஸ்டார்ட்அப் இந்தியா தலைவர் அஸ்தா குரோவர் உள்ளிட்டோர். படம்: பு.க.பிரவீன்

சென்னை: தமிழகத்தை புத்தொழில், புத்தொளிமாநிலமாக உருவாக்குவோம் எனபுத்தொழில் நிறுவன சந்திப்பு நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதிபட தெரிவித்தார்.

தமிழ்நாடு புத்தொழில், புத்தாக்க நிறுவனம் சார்பில், தமிழ்நாடு புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில் காப்பகங்கள் சந்திப்பு நிகழ்ச்சி, சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று, புத்தொழில் நிறுவனங்கள் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார்.

அதன்பின் நடந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு புத்தொழில் ஆதார நிதி திட்டத்தின் 3-ம் பதிப்பில் தேர்வு செய்யப்பட்ட 31 புத்தொழில் நிறுவனங்களுக்கு தலா ரூ.5 லட்சம்மானியத் தொகையை வழங்கினார். தொடர்ந்து, மதுரை, திருநெல்வேலி, ஈரோடு மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள வட்டார புத்தொழில்மையங்களை திறந்து வைத்தார்.

மேலும், பல்வேறு துறைகள் சார்ந்து இயங்கும் 100 புத்தொழில் நிறுவனங்களுக்கு தொழில் வளர்ச்சியை விரைவாக்க பயிற்சி வழங்கும் 5 தொழில் முடுக்கங்களை முதல்வர் தொடங்கி வைத்தார்.

தமிழகத்தின் புத்தாக்க, புத்தொழில் முயற்சியை அனைத்துபகுதிகளிலும் பரவலாக்கும் நோக்கில், பல்வேறு பங்களிப்பாளர்களை ஒருங்கிணைக்கும் வகையில், முதல் கட்டமாக 8 புத்தொழில் சமூக குழுக்களின் கிளைகளையும் தொடங்கி வைத்தார். பின்னர் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

‘ஸ்டார்ட் அப் தமிழ்நாடு’ என்றஇந்த மாநாட்டில் 1,240 புதிய தொழில் நிறுவனங்கள், தொழில் காப்பகங்கள் வந்துள்ளன. புத்தாக்கம் மற்றும் புத்தொழில்கள் சார்ந்து இந்த நிதி ஆண்டின் இறுதியில் தொழில்நுட்பம், புத்தாக்கம் என 2 மிகப் பெரிய மாநாடுகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

வளர்ந்து வரும் நவீன துறைகளை மையமாகக் கொண்டு இயங்கும் புத்தொழில் மற்றும் தொழில் முனைவு நிறுவனங்களில் முதலீடுசெய்ய ரூ.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, அதற்கான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.

 அண்ணா பல்கலைக்கழகத்தில் ‘தமிழ்நாடு தொழில்நுட்ப புத்தாக்க மையத்தை’ ரூ.54.06 கோடி மதிப்பில் அமைக்க ஆரம்பக்கட்ட பணிகள் தொடங்கியுள்ளன. 25 ஆயிரம் சதுரஅடியில் அமையும் இம்மையம், ஐஐடி ஆராய்ச்சிப் பூங்காபோல, உலகத்தரம் மிக்க நிறுவனங்களை உருவாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில் முனைவோர் தங்கள் தயாரிப்புகளை சந்தைப்படுத்த ‘ஸ்டார்ட் அப் தமிழ்நாடு பிராண்ட் லேப்ஸ்’ என்ற அமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது.

# ஊரகப் பகுதிகளில் உள்ள பெண்கள், தொழில் முனைவில்ஈடுபட உதவும் வகையில்‘தொழிலணங்கு’ என்ற நிகழ்வு நடத்தப்படும்.

# சென்னை நந்தனத்தில் புத்தொழில் மையம் 3 மாதத்தில் செயல்படத் தொடங்கும்.

# புதிய புத்தொழில், புத்தாக்கக் கொள்கை விரைவில் வெளியிடப்படும்.

இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு6 முதலீட்டு மாநாடுகள் நடத்தி,ரூ.2.20 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. படித்த அனைவருக்கும் வேலை, படிப்புக்கு ஏற்ற வேலை, நிறுவனங்களின் தேவைக்கு ஏற்ற பணியாளர்கள் என்ற சூழலை உருவாக்குவோம். புத்தொழில் மாநிலமாகவும், புத்தொளி மாநிலமாகவும் தமிழகத்தைஉருவாக்குவோம், உயர்த்துவோம்.

இவ்வாறு முதல்வர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், செஞ்சி மஸ்தான், குறு, சிறு, நடுத்தர தொழில்நிறுவனங்கள் துறை செயலர் அருண்ராய், தொழில் ஆணையர் சிஜி தாமஸ் வைத்யன், தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் இயக்குநர் சிவராஜா ராமநாதன், ‘ஸ்டார்ட் அப் இந்தியா’ தலைவர் அஸ்தா குரோவர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். காணொலி வாயிலாகபேரவைத் தலைவர் மு.அப்பாவு, அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், பி.மூர்த்தி ஆகியோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x