

விழுப்புரம்: சின்னசேலம் தனியார் பள்ளி கலவரத்தில் கைதான மக்கள் அதிகாரம் மற்றும பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த 5 பேரும் சிபிசிஐடியின் விசாரணைக்குப் பிறகு மீண்சிறையில் அடைக்கப்பட்டனர்.
சின்னசேலத்தை அடுத்துள்ள கனியாமூர் தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 மாணவி ஒருவர் சந்தேகத்துக்கிடமான வகையில் உயிரிழந்தார்.
இதைத் தொடர்ந்து நடந்த வன்முறை தொடர்பாக சின்னசேலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து முதற்கட்டமாக 108 பேரை கைது செய்தனர்.
இவர்களின் 103 பேருக்கு நீதிமன்ற காவல் நேற்று முன்தினம் முடிந்ததை அடுத்து அவர்களை காணொளி மூலம் சிறையில் இருந்தபடியே போலீஸார் ஆஜர்படுத்தினர். இவர்களை வருகிற 12-ம் தேதி வரை காவலில் வைக்க கள்ளக்குறிச்சி 2-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
முதற்கட்டமாக கைதானவர்களில் பெரியார் திராவிடர் கழகம் மற்றும் மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த சங்கராபுரம் எஸ்வி பாளையத்தை சேர்ந்த ராமலிங்கம் (56), சின்ன சேலம் செம்பாக்குறிச்சி சரண்குரு (23), கள்ளகுறிச்சி ரங்கநாதபுரம் மணிகண்டன் (28), சங்கராபுரம் அருகே மேலப்பட்டு பிரதீப் (22), கடலூர் மாவட்டம், சிறுநெசவலூர் அய்யாசாமி மகன் கோபு(32) ஆகிய 5 பேரை நேற்று முன்தினம் சிறப்பு புலனாய்வு பிரிவு போலீஸார் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களை ஒருநாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி அனுமதி வழங்கினார்.
இந்நிலையில், விசாரணைக்காக அழைத்துச் சென்றவர்களை போலீஸார் நேற்று மீண்டும் ஆஜர்படுத்தினர். இதையடுத்து, 5 பேரையும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க குற்றவியல் நீதித்துறை நடுவர் முகமது அலி உத்தரவிட்டார்.
இந்த கலவர வழக்கில் அடுத்த கட்டமாக கைதான 173 பேர்களின் சிறை காவல் நேற்றுடன் முடிவடைந்தது. அவர்களில் கடலூர் மத்திய சிறையில் 2 பெண்கள் உள்பட 61 பேர், திருச்சி மத்திய சிறையில் 108 பேர், வேலூர் மத்திய சிறையில் 4 பேர் என மொத்தம் 173 பேர்களும் அந்தந்த மத்திய சிறையில் இருந்தபடியே நேற்று காணொளி மூலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். 173 பேர்களது காவலையும் மேலும் 15 நாட்களுக்கு நீட்டித்து நடுவர் முகமது அலி உத்தரவிட்டார்.
மக்கள் அதிகாரம் மறுப்பு
இந்நிலையில் கள்ளக்குறிச்சியில் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில பொதுச்செயலாளர் வழக்கறிஞர் ராஜு நேற்று செய்தியாளர்களிடம் கூறியது: பள்ளி கலவரசம்பவத்துக்கும் மக்கள் அதிகாரம் அமைப்புக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது.
பழிவாங்கும் நோக்கில் மக்கள் அதிகாரம் ராமலிங்கத்தை போலீஸ் காவலில் எடுத்துள்ளனர். ராமலிங்கம் உடல்நிலை சரியில்லாதவர். அவரை தனிமை சிறையில் வைத்துள்ளனர். அவரை உடனடியாக அங்கிருந்து விடுவிக்க வேண்டும். சிறப்பு புலனாய்வுத் துறையின் விசாரணை சரியான திசையில் செல்லவில்லை என்றார்.