Published : 03 Aug 2022 07:10 AM
Last Updated : 03 Aug 2022 07:10 AM
தருமபுரி/சேலம்: காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்து வரும் கனமழையால் ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து விநாடிக்கு 1.10 லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் அணையிலிருந்து விநாடிக்கு 1.20 லட்சம் கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. ஆடிப்பெருக்கை முன்னிட்டு காவிரியில் மக்கள் புனித நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்த கனமழையால் அங்குள்ள அணைகள் நிரம்பி, கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய அணைகளில் இருந்து உபரிநீர் காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் நீர்வரத்து அதிகரித்து மேட்டூர் அணை கடந்த 16-ம் தேதி நிரம்பியது. இதையடுத்து அணைக்கு வரும் நீர் முழுவதும் காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது.
காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்யும் மழையைப் பொறுத்து அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்யும் மழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது.
ஒகேனக்கல் காவிரியாற்றில் கடந்த மாதம் 31-ம் தேதி விநாடிக்கு 40 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, 1-ம் தேதி 45 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. நேற்று காலை முதல் நீர்வரத்து மேலும் அதிகரிக்கத் தொடங்கியது. காலையில் விநாடிக்கு 50 ஆயிரம் கனஅடியாகவும், பகலில் 70 ஆயிரம் கனஅடியாகவும், மாலையில் விநாடிக்கு 1.10 லட்சம் கன அடியாகவும் நீர்வரத்து அதிகரித்தது. இதனால், ஒகேனக்கல்லில் அருவிகளை மூழ்கடித்தபடி செந்நிறத்தில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.
மேட்டூரில் நீர்திறப்பு அதிகரிப்பு
இதனிடையே, மேட்டூர் அணையிலிருந்து அதிகளவு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நேற்று மதியம் விநாடிக்கு 53 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. மாலை 4 மணிக்கு விநாடிக்கு 76 ஆயிரம் கனஅடியாக அதிகரித்த நீர் வரத்து, 7 மணிக்கு 1.05 லட்சம் கனஅடியாக அதிகரித்தது.
மேட்டூர் அணை ஏற்கெனவே முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் அணைக்கு வரும் நீர் முழுவதும் உபரிநீராக காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதன்படி, மேட்டூர் அணையின் 16 கண் மதகுகள் வழியாக விநாடிக்கு 97 ஆயிரம் கனஅடி, நீர் மின் நிலையங்கள் வழியாக 23 ஆயிரம் கனஅடி என மொத்தம் 1.20 லட்சம் கனஅடி உபரி நீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு 500 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. அணை நீர் மட்டம் 120.11 அடியாகவும், நீர் இருப்பு 93.64 டிஎம்சி-யாகவும் உள்ளது.
பொதுமக்களுக்கு தடை
அணையிலிருந்து அதிகளவு நீர் திறக்கப்பட்டுள்ளதால் காவிரி ஆற்றில் நுங்கும், நுரையுமாக தண்ணீர் பாய்ந்தோடுகிறது. காவிரி கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல நீர் வளத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும், காவிரி ஆற்றில் பொதுமக்கள் குளிக்க, துணி துவைக்க, செல்ஃபி எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஒகேனக்கல் ஆற்றில், அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆடிப்பெருக்கு
ஆடி 18 விழாவின்போது வழக்கமாக பொதுமக்கள் ஒகேனக்கல், மேட்டூர் உள்ளிட்ட நீர்நிலைகளில் புனித நீராடுவது வழக்கம். இன்று (3-ம் தேதி) ஆடி 18 தினமாக இருந்தபோதும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஒகேனக்கல், மேட்டூர் அணை மற்றும் காவிரியாற்றில் நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது.
வழிபாட்டுக்காக திரண்டு வரும் மக்களைக் கட்டுப்படுத்திட, மேட்டூரில் 8 இடங்களில் கோபுரம் அமைத்து, 500-க்கும் மேற்பட்ட போலீஸார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். காவிரி கரையோர பகுதிகளை அரசுத் துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT