

கோவை: ‘பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ்’-ல் தயாரிக்கப்படும் விநாயகர் சிலைகள் விற்பனையை தடுக்க வேண்டும் என, கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஆர்.மணிகண்டன் தமிழக தலைமை செயலருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
கடிதத்தில் கூறியிருப்பதாவது: பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் விநாயகர் சிலைகளை விற்பனை செய்ய சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கெனவே தடை விதித்துள்ளது. இருப்பினும், விநாயகர் சதுர்த்தியின்போது இந்த சிலைகளை தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். விநாயகர் சதுர்த்தி முடிந்த பிறகு கடைசியாக இந்த சிலைகளை நீர்நிலைகளில் மூழ்கடிக்கின்றனர்.
இது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. தமிழகத்தின் பல இடங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் சிலைகளை உற்பத்தி செய்து வருகின்றனர். அவற்றை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விநாயகர் சதுர்த்தியின்போது பல்வேறு இடங்களில் சிலைகளை வைக்கும் முன்பு, அந்த சிலைகள் பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் கொண்டு செய்யப்படவில்லை என மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் சான்று பெறப்பட்டுள்ளதா என்பதை காவல்துறையினர் உறுதி செய்ய வேண்டும்.
அது போன்ற சிலைகளை வாங்குவதை தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு அரசு அறிவுறுத்த வேண்டும். மண்ணால் ஆன சிலைகள் விற்பனையை அரசு ஊக்குவிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.