

சீர்மிகு நகரம் திட்ட நிதியின்கீழ், ரூ.83.58 கோடியில் மாம்பலம் கால்வாயில் நடைபெறும் தூர்வாருதல் மற்றும் மறுசீரமைப்பு பணிகளை பருவமழை தொடங்குவதற்கு முன்பாக முடிக்க அலுவலர்களுக்கு தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு அறிவுறுத்தினார்.
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சிங்கார சென்னை 2.0, ஆசிய வளர்ச்சி வங்கி, உலக வங்கி, உள்கட்டமைப்பு மற்றும் வசதிகள் நிதிபோன்ற பல்வேறு நிதி ஆதாரங்களின் மூலம் ரூ.4,070 கோடிமதிப்பில் 1,033 கி.மீ. நீளமுள்ள மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன.
இதன் ஒரு பகுதியாக, பெருங்குடி, அடையாறு, மாதவரம், மணலிமற்றும் திருவொற்றியூர் ஆகிய மண்டலங்களில் நடைபெறும்மழைநீர் வடிகால் பணிகளை தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதைத்தொடர்ந்து, ராயபுரம், திரு.வி.க.நகர், தேனாம்பேட்டை மற்றும் கோடம்பாக்கம் ஆகிய மண்டலங்களில் ரூ.194.29 கோடி மதிப்பில் நடைபெறும் புதிய மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்தார். ஆய்வின்போது, இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு உடனிருந்தார்.
ராயபுரம் மண்டலத்தில் வார்டு 58-க்கு உட்பட்ட ரிப்பன் கட்டிட வளாகம், பெரியமேடு, வேப்பேரி ஆகிய பகுதிகளில் மழைக்காலங்களில் தேங்கும் மழைநீர் வெளியேறி பக்கிங்ஹாம் கால்வாயில் கலக்கும் வகையில், ரூ.24.96 கோடியில் 2,366 மீ. நீளத்துக்கு மழைநீர் வடிகால் பணிகள்நடைபெறுகின்றன.
இத்திட்டப் பணியில் ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கம் அருகில் மற்றும்சென்ட்ரல் ரயில் நிலையத்தின் முன்புறம் நடைபெற்று வரும் பணிகளையும், ரிப்பன் கட்டிடத்தின் பின்புறம் அல்லிக்குளம் அருகேநடைபெறும் மழைநீர் சேகரிப்பு கீழ்நிலைத் தொட்டி அமைக்கும் பணியையும் அவர் பார்வையிட்டார்.
ஆய்வின்போது, ரயில்வே துறைஇடங்களில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.
சீர்மிகு நகரத் திட்ட நிதியின்கீழ் ரூ.83.58 கோடியில் மாம்பலம் கால்வாயில் மேற்கொள்ளப்பட்டு வரும்தூர்வாருதல் மற்றும் மறுசீரமைப்பு பணிகளை ஆய்வு செய்தார். இந்தஇடங்களில் நடைபெறும் பணிகளைபருவமழை தொடங்குவதற்கு முன்னதாக அதாவது செப்டம்பர்மாத இறுதிக்குள் முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
ஆய்வின்போது, மேயர் ஆர்.பிரியா, எம்எல்ஏக்கள் இ.பரந்தாமன், தாயகம் கவி, நா.எழிலன், ஜெ.கருணாநிதி, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.