Published : 03 Aug 2022 06:39 AM
Last Updated : 03 Aug 2022 06:39 AM

40 அடி சாலை 20 அடியாக மாறிய அவமதிப்பு வழக்கில் சென்னை இந்நாள், முன்னாள் ஆணையர்கள் நேரில் ஆஜர்

சென்னை: 40 அடி சாலை 20 அடி சாலையாக மாறிய நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உயர் நீதிமன்றம் விடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்து இந்நாள் மற்றும் முன்னாள் மாநகராட்சி ஆணையர்கள் நேற்று மதியம் உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளித்தனர்.

சென்னை பெரம்பூர், ஜமாலியா பகுதியில் ஹைதர் மெயின் தெரு மற்றும் சந்திரயோகி சமாதி தெரு ஆகிய பகுதிகளில் உள்ள 40 அடி சாலை ஆக்கிரமிக்கப்பட்டு 20 அடி சாலையாக சுருங்கியுள்ளதாக கடந்த 2007-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த வழக்கில் பிறப்பித்த உத்தரவுப்படி ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை எனக்கூறி கடந்த 2015-ம் ஆண்டு சென்னை மாநகராட்சி ஆணையராக பதவி வகித்த விக்ரம் கபூர் மற்றும் மண்டலஅதிகாரி மோகன கிருஷ்ணன் ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு கடந்தமுறை தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி என்.மாலா ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, சாலையை ஆக்கிரமித்துள்ளதாக கூறப்படும் கட்டிடம் தனியாருக்கு சொந்தமானது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அப்போது நீதிபதிகள், 40 அடி சாலை 20 அடி சாலையாக மாறும் அளவுக்கு திட்ட அனுமதி அளித்த மாநகராட்சி ஆணையரும், மண்டல அதிகாரியும் நேரில் ஆஜராகிவிளக்கமளிக்க உத்தரவிட்டிருந்தனர்.

அதன்படி இந்த வழக்கு நேற்றுகாலை மீண்டும் இதே அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போதுஏற்கெனவே சென்னை மாநகராட்சியின் ஆணையராக பதவி வகித்தவிக்ரம் கபூர் ஆஜராகவில்லை.

மண்டல அதிகாரி மோகன கிருஷ்ணன் மட்டும் ஆஜராகியிருந்தார். விக்ரம் கபூர் ஆஜராகாததற்கு கடும் அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், "அதிகாரிகள் தங்களை நீதிமன்றத்துக்கு மேலானவர்கள் என்றும், தங்களுக்கு மேல் யாரும் இல்லை என்றும் நினைத்துக் கொண்டு இருக்கின்றனர்" என கருத்து தெரிவித்தனர்.

அதற்கு அரசு தரப்பில், இந்த வழக்கில் தங்களது தரப்பில் தவறுகள் உள்ளன என்றும், அதற்காக அபராதம் விதித்தால் ஏற்றுக்கொள்வதாகவும் தெரிவித்தனர்.

அதையேற்க மறுத்த நீதிபதிகள், சென்னை மாநகராட்சியின் அப்போதைய ஆணையர் விக்ரம் கபூர் மற்றும் தற்போதைய ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் இன்று மதியம் (நேற்று) ஆஜராகி விளக்கமளிக்காவிட்டால் அவர்கள் இருவருக்கும் வாரண்ட் பிறப்பிக்கப்படும், என எச்சரித்து விசாரணையை தள்ளி வைத்தனர்.

அதன்படி இந்த வழக்கு நேற்று பிற்பகலில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது முன்னாள் ஆணையரான விக்ரம் கபூர் மற்றும் இந்நாள் ஆணையரான ககன்தீப் சிங் பேடி ஆகிய இருவரும் நேரில் ஆஜராகி மன்னிப்பு கோரினர்.

அதையடுத்து 40 அடி சாலை 20 அடியாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது தொடர்பான உரிமையியல் வழக்குவிவரங்களை தாக்கல் செய்ய மாநகராட்சி தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த வழக்கின் விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளி வைத்தனர். மேலும் எதிர்காலத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை ஆஜராக உத்தரவிட்டால், அந்த அதிகாரிகள் கட்டாயம் ஆஜராகவேண்டுமென அறிவுறுத்தியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x