Published : 03 Aug 2022 07:15 AM
Last Updated : 03 Aug 2022 07:15 AM

பரந்தூரில் அமையும் விமான நிலையத்துக்காக நிலங்களை இழக்கும் விவசாயிகளின் வாழ்வாதாரம் காக்க வேண்டும்: விவசாய சங்கங்கள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்

விமான நிலையம் அமைய உள்ள பரந்தூர் பகுதி.

காஞ்சிபுரம்: பரந்தூர் பகுதியில் 2-வது விமான நிலையம் அமைய உள்ள நிலையில், இதற்காக நிலங்களை இழக்கும் விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போரின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்று விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

காஞ்சிபுரம் பரந்தூர் பகுதியில் 2-வது சர்வதேச விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது. இந்த விமான நிலையத்துக்காக சுமார் 4,500 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. அரசு புறம்போக்கு நிலங்கள் போக 2 ஆயிரம் ஏக்கர் அளவுக்கு விவசாய நிலங்களும் 2000-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளும் கையகப்படுத்தப்பட உள்ளன.

இவ்வாறு நிலங்கள் கையகப்படுத்தும்போது பரந்தூர் மற்றும் சுற்றியுள்ள வளத்தூர், மடப்புரம், நெல்வாய், தண்டலம், ஏகனாபுரம், அக்கம்மாபுரம் உட்பட பல கிராமங்களில் இருந்து நிலங்கள் எடுக்கப்பட உள்ளன.

இந்த கிராமங்களைச் சேர்ந்தவர்கள் பலர் விவசாயத்தை பிரதான தொழிலாகக் கொண்டவர்கள். மேலும் பலர் கால்நடை வளர்ப்பவர்கள். நிலங்களை கையகப்படுத்தும்போது விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழக்க வேண்டி இருக்கும். மேலும் மேய்கால் புறம்போக்கு நிலங்களும் கையகப்படுத்தப்பட இருப்பதால் கால்நடைகளும் அதனை வளர்ப்போரும் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.

இதனால் நிலம் கையகப்படுத்தும்போது இவர்களுக்கான வாழ்வாதாரத்தை மனதில் வைத்து மாற்று தொழில் ஏற்பாடுகளும் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடும் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தப் பகுதி விவசாயிகள் வலியுறுத்துகின்றனர். விவசாயிகள் மட்டுமின்றி விவசாயத்தை நம்பியுள்ள விவசாய தொழிலாளர்களும் பாதிக்கப்படுவார்கள்.

எனவே, அவர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலர் கே.நேரு கூறியதாவது: விமான நிலையம் அமைக்க பரந்தூர் பகுதி இறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கு விவசாயிகளின் நிலங்களை எடுக்கும்போது நில எடுப்புச் சட்டத்தின்படி விவசாயிகளின் ஒப்புதலை பெற்று அவர்களின் நிலங்களை கையகப்படுத்த வேண்டும்.

காவல்துறையை வைத்துக் கொண்டு மிரட்டக் கூடாது. அவர்களுக்கு 3 மடங்கு இழப்பீடு வழங்க வேண்டும். விவசாயிகள் மட்டுமின்றி பாதிக்கப்படும் விவசாய தொழிலாளர்கள் மற்றும் கால்நடை வளர்ப்போருக்கு மாற்றுத் தொழிலுக்கான வழிகளை ஏற்படுத்த வேண்டும்.

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றப்போவதாகக் கூறி ஏழைகளின் வீடுகளை அதிகாரிகள் அப்புறப்படுத்தி வருகின்றனர். இந்த விமான நிலையத்துக்காக 5 கிராம ஏரிகள் முழுவதுமாக கையப்படுத்தப்பட உள்ளன. இதனால் ஏற்படும் பாதகங்களுக்கு ஆட்சியாளர்கள் என்ன பதிலை கூறப்போகின்றனர். இவ்வாறு அவர் கேள்வி எழுப்பினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x