

சென்னை: சின்னத்திரை நடிகை சித்ராவின் மரணம் தொடர்பான வழக்கில் அவரது கணவர் மீதான குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய முடியாது என மறுப்பு தெரிவித்துள்ள உயர் நீதிமன்றம், இதுதொடர்பான மனுவையும் தள்ளுபடி செய்துள்ளது.
இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் இருவருக்கு தொடர்பு இருப்பதாக சித்ராவின் கணவர் தரப்பில் குற்றம் சாட்டி வாதிடப்பட்டுள்ளது. சின்னத்திரை நடிகை சித்ராவின் மரணம் தொடர்பாக அவரது கணவர் ஹேம்நாத் உள்ளிட்டோர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கில் தன் மீதான வழக்கு மற்றும் குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக்கோரி ஹேம்நாத் மனு தாக்கல் செய்திருந்தார். இதனிடையே, ஹேம்நாத் மீதான வழக்கை ரத்து செய்யக் கூடாது என சித்ராவின் தந்தை காமராஜ், இடையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில், ‘எனது மகள் சித்ராவின் மரணத்தில் சந்தேகம் உள்ளது. முகத்தில் காயங்கள் இருந்ததால் ஹேம்நாத் மீது சந்தேகம் உள்ளது. எனது மகள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் சித்ரவதை செய்யப்பட்டார்’ என்று தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பாக நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஹேம்நாத் தரப்பில், சித்ராவின் வருமானத்தை மட்டுமே அவரது குடும்ப உறுப்பினர்கள் நம்பி இருந்தனர்.
சித்ராவை தான் தாக்கியதாக கூறுவது தவறு. தங்களுக்குள் எவ்வித பிரச்சினையும் ஏற்பட்டது இல்லை. சித்ரா தற்கொலைதான் செய்துகொண்டார். இந்த மரணத்தில் முன்னாள் அமைச்சர்கள் இருவருக்கு தொடர்பு உள்ளது. ஆனால், அவர்களுக்கு என்ன சம்பந்தம் என்பது தனக்கு முழுமையாகத் தெரியாது என வாதிடப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, ‘‘எந்த அடிப்படையில் இந்த குற்றச்சாட்டை முன் வைக்கிறீர்கள்’’ என கேள்வி எழுப்பினார்.
அதற்கு ஹேம்நாத் தரப்பில், ‘‘அவர்களுக்கு இதில் தொடர்பு இல்லையென்றால் எதற்காக என்னை இந்த அளவுக்கு இந்த வழக்கில் சிக்க வைக்க வேண்டும். சித்ராவின் கணவர் என்பதற்காக என் மீது கொலைப்பழியை சுமத்தப் பார்க்கின்றனர்.
இந்த வழக்கை இன்னும் தீவிரமாக விசாரித்தால் உண்மை வெளியே வரும். சித்ரா தற்கொலை செய்து கொண்ட இடத்தில் என்ன நடந்தது என்பதுகூட எனக்கு தெரியாது’’ என வாதிடப்பட்டது.
அதையடுத்து நீதிபதி, ‘‘நடிகை சித்ராவின் மரணம் தொடர்பான வழக்கில் கணவரான ஹேம்நாத் மீதான குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரம் உள்ளதால் அவர் மீதான குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய முடியாது’’ என மறுப்பு தெரிவித்து மனுவைத் தள்ளுபடி செய்தும், விசாரணையை நீதிமன்றத்தில் எதிர்கொள்ள வேண்டுமென்றும் உத்தரவிட்டுள்ளார்.