

அரசு புறம்போக்கு இடத்தில் அமைந்திருக்கும் கோயிலை, ஒரு சமூகத்தினர் மட்டும் உரிமை கோர முடியாது என உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.
விருதுநகரைச் சேர்ந்த பால சுப்பிரமணியன், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:
ஆலங்குளம் ஊராட்சி கண்மாய்பட்டி கிராமத்தில் மந்தையம்மன் கோயில், விநாயகர் கோயில்கள் உளளன. இவ்விரு கோயில்களும் 50 ஆண்டுகளுக்கு மேலாக அரசு புறம்போக்கு இடத்தில்தான் அமைந்துள்ளது. 2009-ல் திருவிழாவின்போது இரு சமூகத்தினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, விநாயகர் கோயில் திருவிழாவை ஒரு சமூகத்தினரும், மந்தையம்மன் கோயில் திருவிழாவை மற்றொரு சமூகத்தினரும் நடத்த அமைதிக் கூட்டத்தில் முடிவானது.
இந்நிலையில் விநாயகர் கோயிலை குறிப்பிட்ட சமூகத்தினர் தங்களுக்கு சொந்தமான கோயில் என்று கூறி, அவர்கள் சமுதாய தலைவரின் சிலையை கோயிலில் வைத்துள்ளனர். பிற சமூகத்தினர் நுழையவிடாமல் கோயிலை பூட்டியுள்ளனர். இதனால் இரு கோயில்களிலும் அனைத்து சமூகத்தினரும் சென்று வழிபட உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்.ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தது.
பின்னர் நீதிபதிகள், அரசு புறம்போக்கு நிலத்தில் அமைந் துள்ள கோயிலை ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள், தங்களுக்கானது என எப்படி உரிமை கோர முடியும்? அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள வழிபாட்டு உரிமையை முறையாக மதித்து நடப்பதால், பல்வேறு சமயங்கள் நடைமுறையில் உள்ளன. உலகம் வளர்ச்சிப் பாதையில் செல்லும்போது, கோயிலுக்குள் மற்றொரு சமூகத்தினர் நுழையக் கூடாது என்ற சூழலும் உள்ளது.
இதனால் மனு தொடர்பாக, விருதுநகர் ஆட்சியர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோர் பதில் அளிக்க உத்தர விட்டனர்.