

புதுச்சேரி: ஏனாம் பகுதியில் பிடிபட்ட அதிக சுவையும் புரதச்சத்தும் மிகுந்த அரிய வகை புலாசா மீன்கள் இரண்டும் ரூ.17000-க்கு ஏலம் போயின.
புதுச்சேரி மாநிலத்தில் ஆந்திரத்துக்கு அருகேயுள்ள ஏனாம் பிராந்தியம் கோதாவரி ஆற்று பகுதியில் உள்ளது. கடலும் கோதாவரி ஆறும் இணையும் பகுதியில் ஏனாம் மீனவர்கள் வலைவீசி மீன்பிடிப்பார்கள். இங்கு ஆந்திர மக்கள் உண்ணும் அரிய வகை "புலாசா மீன்" எப்போதாவது பிடிபடும்.
புலாசாவை மீன்களின் ராஜா என ஆந்திர மக்கள் அழைக்கின்றனர். அதிக சுவையும் சத்துக்களும் கொண்ட இந்த மீன் பிடிபடும்போதெல்லாம் ஏலம் விடப்படும்.
அந்த வகையில் கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்ட் 17-ம் தேதி பிடிபட்ட மீன் ரூ.20,000-க்கு ஏலம் போனது. அடுத்து செப்டம்பர் 3-ம் தேதி 2 மீன்கள் பிடிப்பட்டன. 2 கிலோ எடை கொண்ட மீன் ஒன்று ரூ.25,000-க்கும், மற்றொரு மீன் ரூ.23,000-க்கும் ஏலம் போனது.
இந்த நிலையில், இன்று காலை ஏனாமில் புலாசா மீனகள் 2 பிடிபட்டன. இவை மீன்கள் அங்காடியில் ஏலம் விடப்பட்டன. ஒரு மீன் ரூ.8,000, மற்றொரு மீன் ரூ.9,000 என ரூ.17,000-க்கு ஏலம் போயின. இதனை பொன்னமாண்ட ரத்னம் என்ற பெண் ஏலம் எடுத்தார்.