

சென்னை: நிலக்கரி கொள்முதல் விவகாரத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை ஆவணம் இருந்தால் மட்டும் பேச வேண்டும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
அதி கனமழையை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக சென்னை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைமை அலுவலகத்தில், அனைத்து இயக்குனர்கள் மற்றும் தலைமை பொறியாளர்களுடன் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆலோசனை நடத்தினார்.
இதனைத் தொடர்ந்து அவர் அளித்த பேட்டியில், " இதுவரை 10,77,910 பராமரிப்புப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. மழைக்காலத்தில் சீரான மின் விநியோகம் வழங்குவதற்க்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் நடைபெற்று வருகிறது
மாவட்டம் வாரியாக, மின்வாரிய உயர் அதிகாரிகள் இரவு நேரங்களிலும் சிறப்புப் பணிகளில் ஈடுபட்டு சீரான மின் விநியோகம் வழங்குவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அடுத்த 3 நாட்களுக்கு வரும் கன மழையை கையாள தயாராக உள்ளோம்.
மின்சார வாரியம் மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று மத்திய அரசு அனுப்பிய கடிதத்தை வெளியிட இயலாது அமைச்சராக பதவி ஏற்கும் போது சத்தியபிரமாணம் செய்துள்ளேன் இது வெளிப்படைத் தன்மையான ஆவணங்கள் அல்ல.
ஒரு அரசியல் கட்சி அமலாக்கத்துறையை எப்படி பயன்படுத்துகிறது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசுவதிலேயே தெரிகிறது, நிலக்கரி கொள்முதல் தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் குற்றச்சாட்டுகள் எதுவும் ஏற்புடையது அல்ல. மத்திய அரசு எவ்வளவு டாலருக்கு நிலக்கரி இறக்குமதி செய்யக் கூறியுள்ளது என தெரிவிக்க வேண்டும். அவரிடம் ஆவணம் இருந்தால் பேசச் சொல்லுங்கள், வெற்று விளம்பரத்திற்காக பேச வேண்டாம்" இவ்வாறு அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.