Published : 02 Aug 2022 01:35 PM
Last Updated : 02 Aug 2022 01:35 PM
சென்னை: பரந்தூரில் அமையவிருக்கும் புதிய விமான நிலையத் திட்டத்தை செயல்படுத்துவது தமிழ்நாட்டை 1 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக உருவாக்கும் உயர்ந்த குறிக்கோளை எட்டுவதற்கானப் பயணத்தில் மற்றொரு மைல் கல் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னையின் 2 வது விமான நிலையம் பரந்தூரில் அமைய உள்ளது. இந்நிலையில் புதிய பன்னாட்டு விமானநிலையம் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குப் படிக்கட்டாகும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தியாவின் வளர்ச்சி பெற்ற - கட்டமைப்பு வசதிமிகுந்த மாநிலங்களில் முன்னணியில் திகழும் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி மேலும் அதிகரிக்கும் வகையில் கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்துவதற்கு நமது திராவிட மாடல் அரசு தனி கவனம் செலுத்தி வருகிறது.
நம் மாநிலத்திற்கு வருகை புரியும் முதலீட்டாளர்கள், சுற்றுலா பயணிகள் மற்றும் பல்வேறு காரணங்களுக்காக பயணம் மேற்கொள்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
தற்போது உள்ள சென்னை விமானநிலையம் ஆண்டுக்கு 2.2 கோடி பயணிகளை கையாண்டு வருகிறது. மேலும், தற்போது நடைபெற்றுவரும் விரிவாக்கப் பணிகளுக்குப் பிறகு, அடுத்த 7 ஆண்டுகளில் சென்னை விமானநிலையம் அதிகபட்ச அளவான ஆண்டிற்கு 3.5 கோடி பயணிகளை கையாளும் திறனை எட்டக்கூடும்.
சென்னை விமானநிலையத்தின் மென்மேலும் அதிகரித்துவரும் விமானப்பயணிகள் போக்குவரத்து மற்றும் சரக்கு போக்குவரத்து வளர்ச்சியை கருத்தில் கொண்டும், மாநிலத்தின் பன்னாட்டு மற்றும் உள்நாட்டு விமானப்போக்குவரத்து சேவையை தொடர்ந்து பூர்த்தி செய்யும் வகையிலும் சென்னையில் புதிய விமானநிலையம் அமைக்க தகுதியான இடத்தை தேர்வு செய்யும் பணியை அரசு நிறுவனமான டிட்கோ நிறுவனம் மூலம் தமிழ்நாடுஅரசு மேற்கொண்டது.
புதிய விமானநிலையம் அமைக்க நான்கு பொருத்தமான இடங்கள் தேர்வு செய்யப்பட்டன. அவற்றில் இந்திய விமானநிலைய ஆணையம் ஆய்வு செய்து சாத்தியமான இடங்களாக பரிந்துரைத்த இரண்டு இடங்களில் ஒன்றான பரந்தூரில் புதிய விமானநிலையம் அமைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. தற்போதைய சென்னை விமானநிலையம் மற்றும் புதியதாக அமைக்கப்படவுள்ள விமானநிலையம் ஆகியஇரண்டும் சேர்ந்து செயல்படும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
புதிதாக அமையவுள்ள விமானநிலையம், 10 கோடி பயணிகளை கையாளக்கூடிய திறன் உடையதாக அமைக்கப்பட உள்ளது. இரண்டு ஓடுதளங்கள் (Runways), விமானநிலைய முனையங்கள் (Terminal Buildings), இணைப்புப்பாதைகள் (Taxiways), விமானங்கள் நிறுத்துமிடம் (Apron), சரக்கு கையாளும் முனையம், விமான பராமரிப்பு வசதிகள் மற்றும் தேவையான இதர உட்கட்டமைப்பு வசதிகளுடன் புதிய விமானநிலையம் அமைக்கப்பட உள்ளது. விரிவான திட்ட அறிக்கை தயாரித்தபின் புதிய விமானநிலையத்திற்கான திட்டமதிப்பு இறுதி செய்யப்படும். தற்போதைய உத்தேச திட்டமதிப்பு 20,000 கோடி ரூபாய் ஆகும்.
ஒன்றிய விமான போக்குவரத்து அமைச்சகம் 2008-ல் வெளியிட்டுள்ள புதிய விமானநிலையம் அமைப்பதற்கான வழிகாட்டுதலின்படி (Guidelines for Greenfield Airport) தேர்வு செய்யப்பட்ட இடத்திற்கான ஒப்புதல் (site clearance) பெற ஒன்றிய அரசின் விமான போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் உள்ள குழுவிற்கு விரைவில் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்படும். இடஅனுமதி ஒப்புதல் பெற்றபின், திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்தப்படும் மற்றும் திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும்.
இதனைத் தொடர்ந்து விமானநிலைய திட்டத்திற்கான கொள்கை ஒப்புதல் (“in-principle” approval) மற்றும் விமான நிலையம் செயல்படுவதற்கான அனுமதி ஒன்றிய அரசின் விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் பெறப்படும். தமிழ்நாட்டின் வளர்ச்சியைப் பிற மாநிலங்களுடன் ஒப்பிட்டு, முன்னேற்ற அடையாளத்தைக் காண்கிற நிலையில், எதிர்காலத்தில் உலக நாடுகளுடன் ஒப்பிட்டு வளர்ச்சியினைக் காட்டும் வகையில் திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது.
பரந்தூரில் அமையவிருக்கும் புதிய விமான நிலையத் திட்டத்தை செயல்படுத்துவது என்பது நமது மாநிலத்தின் வளர்ச்சிக்கானப் படிக்கட்டு. தமிழ்நாட்டை 1 ட்ரில்லியன் டாலர் (One Trillion Dollar) பொருளாதாரமாக உருவாக்கும் உயர்ந்த குறிக்கோளை எட்டுவதற்கானப் பயணத்தில் இது மற்றொரு மைல் கல்லாகும்" இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT