Published : 02 Aug 2022 04:43 AM
Last Updated : 02 Aug 2022 04:43 AM
சென்னை: அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ - ஜியோ சார்பில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இரா.தாஸ், அன்பரசு, கு.தியாகராஜன், மாற்று ஒருங்கிணைப்பாளர்கள் கு.வெங்கடேசன், மாயவன் உள்ளிட்ட 16 பேர் கொண்ட குழுவினர், தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேற்று சந்தித்தனர்.
அப்போது, ஆசிரியர்கள், அரசுஊழியர்கள் தொடர்பான கோரிக்கை மனுவை அளித்தனர். மேலும், ஆகஸ்ட் இறுதியில் ஜாக்டோ - ஜியோ சார்பில் நடைபெறும் மாநில மாநாட்டில் முதல்வர் பங்கேற்கவும் அழைப்பு விடுத்தனர்.
இதுதவிர, ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கோரிக்கைகள் குறித்து தமிழக நிதியமைச்சர் தொடர்ந்து முரணான தகவல்களை தெரிவிப்பது குறித்தும், தேர்தல் வாக்குறுதிகளுக்கு எதிராக பேசி வருவது குறித்தும் முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்றனர்.
இந்த சந்திப்பு தொடர்பாக ஜாக்டோ - ஜியோ சார்பில் நேற்று வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
இம்மாத இறுதியில் ஜாக்டோ -ஜியோ நடத்த திட்டமிட்டுள்ள மாநில மாநாட்டில் பங்கேற்க முதல்வர் இசைவு தெரிவித்துள்ளார். ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீதான தனது நல்லெண்ணத்தை வெளிக்காட்டும் வகையில் இந்த சந்திப்பு அமைந்ததற்கு முதல்வருக்கு ஜாக்டோ - ஜியோ நன்றி தெரிவித்துக் கொள்கிறது.
இந்த சந்திப்புக்கு காரணமான பள்ளிக்கல்வித் துறை அமைச்சருக்கும் நன்றி தெரிவிக்கிறோம். ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பால் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆக.5-ம் தேதி நடத்த திட்டமிட்டிருந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு செய்திக் குறிப்பில்கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT