Published : 02 Aug 2022 04:16 AM
Last Updated : 02 Aug 2022 04:16 AM

காஞ்சிபுரம் அருகே பரந்தூரில் அமைகிறது சென்னையின் 2-வது விமான நிலையம் - மத்திய இணையமைச்சர் வி.கே.சிங் அறிவிப்பு

சென்னை: காஞ்சிபுரம் அருகே பரந்தூரில் சென்னையின் 2-வது விமான நிலையம் அமைய உள்ளது. சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் அனுமதி அளித்ததும் அதற்கான பூர்வாங்கப் பணிகள் தொடங்கும் என்று மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்தார்.

இந்தியாவில் உள்ள மிகப்பெரிய விமான நிலையங்களில் சென்னை விமான நிலையம் முக்கியமானதாகும். இங்கிருந்து உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதையடுத்து, விமான நிலையத்தில் விரிவாக்கப் பணிகள் நடந்து வருகின்றன. அடுத்த சில ஆண்டுகளில் விமானங்கள் மற்றும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் இடநெருக்கடியை சமாளிக்க, சென்னைக்கு அருகில் புதிய விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, சென்னையின் இரண்டாவது விமான நிலையம் (Green Field) அமைப்பதற்கான முயற்சியில் மத்திய, மாநில அரசுகள் இறங்கியது. இரண்டாவது விமான நிலையம் அமைப்பதற்காக செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர், படாளம், காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர், திருவள்ளூர் மாவட்டம் பன்னூர் ஆகிய 4 இடங்களை தமிழக அரசு தேர்வு செய்திருந்தது. அதில், பரந்தூர், பன்னூர் ஆகிய இரண்டு இடங்கள் இறுதி செய்யப்பட்டது.

இந்த இரண்டு இடங்களில் இறுதியாக ஒரு இடத்தை தேர்வு செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம், மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா தலைமையில் டெல்லியில் கடந்த மாதம் 26-ம் தேதி நடந்தது. இதில் தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பங்கேற்றார். கூட்டத்தின் முடிவில், அமைச்சர் தங்கம் தென்னரசு கூறும்போது, “சென்னையில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான இடம் தேர்வு குறித்து விவாதித்தோம். பரந்தூர், பன்னூர் ஆகிய இடங்களில் சாத்தியக்கூறுகள் இருப்பதாக தெரிவித்தனர். அந்த இடங்களுக்கான ‘சைட் கிளியரன்ஸ்’ வேண்டும் என்பதற்காக அமைச்சரிடம் விவாதித்துள்ளோம்” என்றார். இதனால், பரந்தூர், பன்னூர் இரண்டில் எந்த இடத்தில் விமான நிலையம் அமையப் போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது.

இந்நிலையில், நாடாளுமன்ற மாநிலங்களவையில் திமுக எம்.பி. கனிமொழி என்.வி.என்.சோமு, “சென்னையில் சுற்றுச்சூழலுக்கு உகந்த பசுமை விமான நிலையம் அமைக்க திட்டம் உள்ளதா? அதற்காக ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு” என கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு மத்திய விமான போக்குவரத்துத் துறை இணையமைச்சர் வி.கே.சிங் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:

இந்தியாவில் சுற்றுச்சூழலுக்கு உகந்த பசுமை விமான நிலையங்களை அமைக்க ஏதுவாக, கடந்த 2008-ம் ஆண்டு பசுமை விமான நிலையங்கள் கொள்கை உருவாக்கப்பட்டது. அதன்படி, புதிய விமான நிலையங்களை அமைக்க விரும்பும் மாநில அரசோ, தனியார் நிறுவனமோ அதற்கான திட்ட அறிக்கையை மத்திய விமான போக்குவரத்து துறைக்கு அனுப்ப வேண்டும். அந்த இடத்துக்கான அனுமதி, கொள்கை அளவிலான அனுமதி என 2 அனுமதிகளை அமைச்சகத்திடம் இருந்து பெற வேண்டும்.

இதற்காக அளிக்கப்பட்ட திட்ட அறிக்கை, பசுமை விமான நிலையங்களை அமைக்க வகுக்கப்பட்ட விதிகள்படி இருக்கிறதா என்பதை உறுதி செய்து, 2 அனுமதிகளையும் விமான போக்குவரத்துத்துறை வழங்குகிறது. அந்த அனுமதிகளை பெற்றபின், விமான நிலையம் அமைக்க நிதி திரட்ட வேண்டியது சம்பந்தப்பட்ட நிறுவனம் அல்லது மாநில அரசின் பொறுப்பாகும். அந்தவகையில் சென்னைக்கு அருகே புதிய விமான நிலையம் அமைக்க 4 இடங்களை தமிழக அரசு தேர்வு செய்து, இந்திய விமான நிலையங்கள் ஆணையத்திடம் ஆய்வு செய்ய கேட்டுக்கொண்டது. விமான நிலையங்கள் அமைக்க அடிப்படை சாத்தியமுள்ள பரந்தூர் மற்றும் பன்னூர் ஆகிய 2 இடங்களை கண்டறிந்த ஆணையம், அதை தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகத்துக்கு அனுப்பி வைத்தது.

அந்த இரண்டு இடங்களிலும் அடுத்தகட்ட சாத்தியக்கூறுகள் ஆய்வு செய்யப்பட்டன. விளை நிலங்கள், தொழிற்சாலைகள், மக்கள் வசிக்கும் பகுதிகள், நிலத்தை கையகப்படுத்த ஆகும் செலவு என பல்வேறு அம்சங்களை ஆராய்ந்த தமிழக அரசு, இறுதியாக, புதிய 2-வது பசுமை விமான நிலையம் அமைய எல்லா வகையிலும் ஏற்ற இடம் பரந்தூர் என முடிவெடுத்து மத்திய அரசுக்கு தெரிவித்துள்ளது. இறுதி செய்யப்பட்டுள்ள பரந்தூரில் விமான நிலையம் அமைக்க அப்பகுதிக்கான இட அனுமதியை வழங்கும்படி கேட்டு மத்திய விமான போக்குவரத்து அமைச்சகத்துக்கு தமிழக அரசு கடிதம் அனுப்பும். அனுமதி கிடைத்த பிறகு புதிய விமான நிலையம் அமைப்பதற்கான பூர்வாங்கப் பணிகள் தொடங்கும்.

மேலும், உடான் திட்டத்தின்கீழ் மண்டலங்களை இணைக்கும் வகையில் தமிழகத்தில் நெய்வேலி, தஞ்சாவூர், ராமநாதபுரம் மற்றும் வேலூர் ஆகிய 4 விமான நிலையங்களை புதுப்பித்து தரம் உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பரந்தூரில் விமான நிலையம் அமைக்க ஏற்கெனவே 4,971 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. சுமார் ரூ.60 ஆயிரம் கோடியில் விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து 73 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள பரந்தூருக்கு 2 மணி நேரத்தில் சென்றுவிடலாம். காஞ்சிபுரத்தில் இருந்து 15 கி.மீ. சென்னை - பெங்களூரு 6 வழிச்சாலையில் இருந்து 10 கி.மீ. தொலைவில் பரந்தூர் அமைந்துள்ளது.

பரந்தூர் வழியாக சென்னை - பெங்களூரு விரைவுச் சாலை அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த சாலை அமைக்கப்பட்டால் பரந்தூர் விமான நிலையத்தில் இருந்து பெங்களூரு, சென்னை, ஸ்ரீபெரும்புதூர் ஆகிய பகுதிகளுக்கு எளிதில் சாலை மார்க்கமாக செல்லலாம்.

சென்னையின் இரண்டாவது விமான நிலையம் அமைக்கும் இடங்களின் பட்டியலில் பரந்தூர் இடம்பெற்றதால், ஏற்கெனவே அப்பகுதியில் நிலங்களின் மதிப்பு அதிகரித்தது. தற்போது அதிகாரப்பூர்வமாக பரந்தூர் அறிவிக்கப்பட்டுள்ளதால் நிலங்களின் மதிப்பு பல மடங்கு அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x