

சென்னை: அமைச்சர் ராஜ கண்ணப்பனுக்கு எதிரான வன்கொடுமை புகார் குறித்த அறிக்கை கிடைத்ததும், அவர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்படும் என தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவர் தெரிவித்துள்ளார்.
தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவர் அருண் ஹல்தார் 3 நாள்பயணமாக சென்னை வந்துள்ளார். தலைமைச் செயலர் இறையன்பு, டிஜிபி சைலேந்திர பாபுவுடன் அவர் நேற்று ஆலோசனை நடத்தினார்.
பிறகு, சேப்பாக்கம் விருந்தினர் மாளிகைக்கு வந்த அவர், தமிழகத்தின் சில மாவட்டங்களில் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மக்களுக்கு எதிராக நடந்த வன்கொடுமை சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்தினார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அருண் ஹல்தார் கூறியதாவது: தற்போது நடத்தப்பட்ட விசாரணையில், 6 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. குறிப்பாக, ஊட்டியில் பல ஆண்டுகளாக பட்டா இல்லாமல் கஷ்டப்பட்டு வந்த 40 பேருக்கு ஒரு மாதத்தில் பட்டா வழங்கவும், நீண்ட நாட்களாக மின்சார வசதி இல்லாமல் இருந்த7 குடும்பங்களுக்கு மின்வசதி வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தென்காசியில் 27 சென்ட்இடத்தை எஸ்.சி. மற்றும் கிறிஸ்தவர் எஸ்.சி. என இரு தரப்பினர் சொந்தம் கொண்டாடினர். எஸ்.சி.யில் கிறிஸ்தவர் என்பது கிடையாது என தெரிவிக்கப்பட்டு, அங்கு கல்வி நிலையம் அமைக்க ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் மீது வட்டார வளர்ச்சி அதிகாரி ராஜேந்திரன் கொடுத்த புகார் குறித்து தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. இதுகுறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு தமிழக அரசிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இச்சம்பவம் தொடர்பான வீடியோவை தடயவியல் துறைக்கு அனுப்பி, அதன் நம்பகத்தன்மை குறித்து ஆய்வு நடத்தி வருகிறோம். இந்த அறிக்கை வந்த பிறகு, ஆளுநர், முதல்வர் மூலமாக நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் ஆந்திர மாநில இயக்குநர் சுனில்குமார் பாபு, தூர்தர்ஷன் செய்திப் பிரிவு இயக்குநர் குருபாபு பலராமன், பத்திரிகை தகவல் அலுவலக இணை இயக்குநர் நதீம் துபெல் உடன் இருந்தனர்.