Published : 02 Aug 2022 06:26 AM
Last Updated : 02 Aug 2022 06:26 AM

மத்திய அரசின் ஜிஎஸ்டி வரியைத் தவிர்க்க 26 கிலோ பண்டல் அரிசி விற்பனை தொடக்கம்: திருப்பூர், காங்கயம் அரிசி வியாபாரிகள் புதிய முயற்சி

திருப்பூர் அரிசிக்கடை வீதியில் நேற்று லாரியில் வந்திறங்கிய 26 கிலோ அரிசி மூட்டைகள்.

திருப்பூர்: 25 கிலோ பண்டல் செய்யப்பட்ட அரிசி மீதான 5 சதவீதம் ஜிஎஸ்டி வரியைத் தவிர்க்க, 26 கிலோ பேக்கிங் செய்து, திருப்பூர், காங்கயம் அரிசி உற்பத்தியாளர்கள் விற்பனையில் ஈடுபட்டிருப்பது பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

25 கிலோ வரை பண்டல் செய்யப்பட்ட அரிசிக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கயத்தில் 100-க்கும் மேற்பட்ட அரிசி ஆலைகளும் மாநிலம் முழுவதும் சுமார் 3,500 அரிசி ஆலைகள் கடந்த 15-ம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டன.

25 கிலோ வரை பண்டல் செய்யப்பட்ட அரிசிக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிப்பால், பண்டல் செய்யப்பட்ட அரிசியின் விலை கிலோவுக்கு ரூ.2 முதல் ரூ.3 வரை உயர்ந்துள்ளது. 25 கிலோ கொண்ட ஒரு மூட்டை அரிசிக்கு ரூ.50 முதல் ரூ.80 வரைஉயர்ந்துள்ளது. ஒரு குவிண்டாலுக்கு ரூ.200 முதல் ரூ.300 வரை உயர்ந்துள்ளது. இந்த விலை ஏற்றம் நடுத்தர குடும்பங்களை வெகுவாக பாதிக்கும்.

தமிழகம் முழுவதும் உள்ள 3,500 ஆலைகளில், நாள் ஒன்றுக்கு 52 ஆயிரத்து 500 டன் அரிசி உற்பத்தி செய்யப்படுகிறது. ஜிஎஸ்டி வரி விதிப்பை தவிர்க்கும் வகையில், 25 கிலோ அரிசி பண்டலுக்கு பதிலாக தற்போது 26 கிலோ அரிசியை பண்டல் செய்து வியாபாரத்தை தொடங்கி உள்ளனர் திருப்பூர், காங்கயத்தை சேர்ந்த வியாபாரிகள்.

திருப்பூர் அரிசி மண்டி மொத்த வியாபாரிகள் சங்கத் தலைவர் துரைசாமி கூறியதாவது: 25 கிலோவுக்குள் பண்டல் செய்யப்பட்ட அரிசிக்கு ஜிஎஸ்டி வரிவிதிப்பால், அரிசியின் விலை ரகத்துக்கு ஏற்றபடி கூடுதலானது. ஏற்கெனவே கரோனா தொற்றால் பொதுமக்களிடம், அத்தியாவசியப் பொருட்களை வாங்கும் திறன் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த வரிச்சுமை மேலும் அவர்களை பாதிக்கும். இதையடுத்து பொதுமக்களின் நன்மை கருதி, 25 கிலோவுக்கு பதிலாக 1 கிலோ அரிசியை கூடுதலாக்கி, 26 கிலோ அரிசி பண்டல்உற்பத்தி செய்து, விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. உணவுத்துறை அதிகாரிகளுடன் பேசிய பின்னரே, இந்த 26 கிலோ பண்டலை கடைகளில் நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

திருப்பூரை சேர்ந்த அரிசிக்கடை வியாபாரி செந்தில்குமார் கூறும்போது, “தற்போது இந்த பண்டல்முறையால், ஜிஎஸ்டி வரியின்றிபொதுமக்களுக்கு பழைய விலைக்கே அரிசியை விற்க முடியும். ஜிஎஸ்டி விதிகளின்படி 25 கிலோவுக்கு மேல் பண்டல் செய்யும் அரிசியை வரிக்கு உட்படுத்த தேவையில்லை என அதிகாரிகள் தெளிவுபடுத்திய பின்னரே, இதனை நடைமுறைப்படுத்தி உள்ளோம். காங்கயம் உள்ளிட்ட அனைத்து அரிசி ஆலைகளிலும் தற்போது இந்த முறை பின்பற்றப்படுகிறது. பொதுமக்களின் மீது வரிச்சுமையை ஏற்றாமல் இருப்பதற்கான விஷயம்தான் இது.

ஏற்கெனவே கடந்த சில மாதங்களாக வியாபாரம் குறைந்திருக்கும் நிலையில், ஜிஎஸ்டி வரி விதிப்பு என்பது வியாபாரத்தை படுமோசமான நிலைக்குத் தள்ளும். தற்போது அரசு அறிவித்துள்ள மின் கட்டண உயர்வு உட்பட பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டிருக்கிறோம்.

அதேசமயம் சிலர் அளவாக அரிசி வாங்க நினைப்பவர்கள், 5 கிலோ அல்லது 10 கிலோ பண்டல் அரிசியை வாங்கும்போது அதற்கு உண்டான ஜிஎஸ்டி வரி விதித்துதான், தொகையை பெறுகிறோம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x