

திருச்சி: திருச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டியில் என்சிசி வீரர்கள், வீராங்கனைகள் 22 பதக்கங்களை வென்றுள்ளனர்.
47-வது மாநில அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டிகள் திருச்சி கே.கே.நகர் ஆயுதப்படை வளாகத்திலுள்ள திருச்சி ரைபிள் கிளப்பில் கடந்த ஜூலை 24-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை நடைபெற்றது.
இதில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 1,300-க்கும் அதிகமான வீரர்கள் பங்கேற்றனர். 10 மீட்டர், 25 மீட்டர், 50 மீட்டர் துப்பாக்கி சுடும் தளங்களில் பல்வேறு பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடத்தப்பட்டன.
இவற்றில் வெற்றி பெற்றவர்களுக்கு ஓய்வு பெற்ற டிஜிபி ஜாங்கிட் நேற்று முன்தினம் பரிசுகளை வழங்கினார். இப்போட்டியில் பங்கேற்ற என்சிசி தமிழ்நாடு, அந்தமான் மற்றும் புதுச்சேரி இயக்குநரகத்தைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் 22 பதக்கங்களை வென்றுள்ளனர்.
அவர்களில், என்சிசி தமிழ்நாடு (பெண்கள்) பட்டாலியனைச் சேர்ந்தவரும், சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி மாணவியுமான ரதுஜா பக்ஷி குழுப் போட்டியில் ஒரு தங்கமும், தனி நபர் பிரிவில் (50 மீ ஓபன் ப்ரோன் ஜூனியர் பெண்கள்) ஒரு வெள்ளிப் பதக்கமும் வென்றுஉள்ளார். இவர்களை போட்டி ஏற்பாட்டாளர்கள், என்சிசி தமிழ்நாடு, அந்தமான், புதுச்சேரி இயக்குநரக அதிகாரிகள் பாராட்டினர்.