

தமிழக காங்கிரஸ் பொதுச் செயலாளர் என்.அருள் பெத்தையா, சென்னை காவல் ஆணையர் ஜார்ஜிடம் நேற்று அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
இணையதள ட்விட்டர் பக்கத்தில் ராஜகோபாலன் சுப்ரமன் என்ற பெயரில் ஒருவர் கடந்த 16-ம் தேதி அதிகாலை 5 மணிக்கு ஒரு பதிவை செய்துள்ளார். அதில், ‘ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும் என்றால் ப.சிதம்பரத்தையும் அவரது குடும்பத்தையும் கொல்வதுதான் சிறந்த வழி’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் பதிவு அதிர்ச்சி அளிக்கிறது. வெளிப்படையான இந்த மிரட்டல் ப.சிதம்பரம் மற்றும் அவரது குடும்பத்தினரின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. எனவே, மிரட்டல் விடுத்தவர் மீது வழக்கு பதிந்து சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு புகாரில் தெரிவித் துள்ளார். இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.