

சென்னை: ஏ.சி வெடித்ததால் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி புது மாப்பிள்ளை உயிரிழந்துள்ளார். திரு.வி.க. நகர், மணவாளன் தெருவைச் சேர்ந்தவர் பிரபாகர்.இவரது மகன் ஷியாம்(27). இவர் அப்பகுதியில் ஆவின் உள்ளிட்ட பாக்கெட் பால் விற்பனை செய்யும் கடை நடத்தி வந்தார். ஷியாமுக்கு, நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்ததனலட்சுமி(24) என்ற பெண்ணுக்கும் 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
ஆடி மாதம் என்பதால் தனலட்சுமி, அவரது தாய் வீட்டுக்குச்சென்றுவிட்டார். இந்நிலையில்ஷியாம் நேற்று முன்தினம் இரவுதனது அறையில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அந்த அறையின் இருந்த ஏ.சி. திடீரென வெடித்து, அங்கிருந்த பொருட்கள் தீப்பிடித்து எரியத் தொடங்கின.
ஏசி வெடித்த சத்தம் கேட்டு,மற்றொரு அறையில் தூங்கிக்கொண்டிருந்த பிரபாகர், ஷியாமின் சகோதரர் ஆகியோர்விரைந்து சென்று ஷியாமை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவர்களால் அந்த அறையைக் கூடநெருங்க முடியவில்லை.
எனவே, தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு படை வீரர்கள்மாதவரத்தில் இருந்து விரைந்துசென்று, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அரை மணிநேர போராட்டத்துக்கு பின், தீமுழுமையாக அணைக்கப்பட்டது. அந்த அறையில் இருந்துஷியாம் தீயில் கருகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
தகவலறிந்த திரு.வி.க.நகர் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஷியாம் சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.