வர்த்தக பயன்பாட்டுக்கான காஸ் விலை குறைப்பு

வர்த்தக பயன்பாட்டுக்கான காஸ் விலை குறைப்பு
Updated on
1 min read

சென்னை: வர்த்தகப் பயன்பாட்டுக்கான காஸ் சிலிண்டர் விலை ரூ.36.50 குறைக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தை நிலவரம் மற்றும் அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் காஸ்சிலிண்டர் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் அவ்வப்போது நிர்ணயித்து வருகின்றன.

உக்ரைன் - ரஷ்யா போர் தொடங்கியதையடுத்து, கச்சா எண்ணெய் விலை அதிகரித்து பெட்ரோல், டீசல், சமையல் காஸ் சிலிண்டர் ஆகியவற்றின் விலை பன்மடங்கு உயர்ந்தது.

தற்போது கச்சா எண்ணெய்விலை குறையத் தொடங்கியதையடுத்து, கடந்த 70 நாட்களுக்கும் மேலாக பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை உயர்த்தப்படாமல் உள்ளன.

இந்நிலையில், வர்த்தகப் பயன்பாட்டுக்கான காஸ் சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் குறைத்துள்ளன. அதன்படி, 19 கிலோ எடையுள்ள வர்த்தகப் பயன்பாட்டு சிலிண்டரின் விலை ரூ.36.50 குறைந்துள்ளது. இதையடுத்து ரூ.2,177.50-ல் இருந்து ரூ.2,141 ஆக விலை குறைந்தது.

அதேசமயம், வீடுகளுக்குப் பயன்படுத்தப்படும் காஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை.

கடந்த மே 19-ம் தேதிக்குப் பின்னர் வர்த்தகப் பயன்பாட்டு சிலிண்டரின் விலை 4-வது முறையாக குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in