Published : 02 Aug 2022 04:20 AM
Last Updated : 02 Aug 2022 04:20 AM

விவசாய நிலத்தை மீட்டு கொடுங்கள்: காலில் விழுந்து கதறிய விவசாயி - தரையில் அமர்ந்து குறையை கேட்ட ஆட்சியர்

தரையில் அமர்ந்து விவசாயி நாராயண சாமியிடம் குறைகளை கேட்ட திருப்பத் தூர் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வுக் கூட்டத்தில் ஆட்சியர் அமர் குஷ்வாஹா காலில் விழுந்து விவசாயி கதறிய சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியது.

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா தலைமை வகித்தார். அப்போது அங்கு மனு கொடுக்க வந்து காத்திருந்த விவசாயி ஒருவர் திடீரென ஆட்சியரின் காலில் விழுந்து எனது நிலத்தை மீட்டுத் தாருங்கள் எனக்கூறி கதறி அழுதார். இதனை சற்றும் எதிர்பார்க்காத ஆட்சியர் அமர் குஷ்வாஹா, அந்த விவசாயியை எழுப்ப முயன்றார். ஆனால், ஆட்சியரின் கால்களை இறுக்கமாக பிடித்த விவசாயி எனக்கு தீர்வு வேண்டும் எனக்கூறி கதறினார்.

உடனே, ஆட்சியர் திடீரென தரையில் அமர்ந்து அவரிடம் பேச தொடங்கி அவரது கோரிக்கை என்ன என கேட்டார். அப்போது, அந்த விவசாயி ஆட்சியரிடம் கூறியதாவது, ‘‘ திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வள்ளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த எனது பெயர் நாராயணசாமி (51). எனக்கு வள்ளிப்பட்டு கிராமத்தில் 1.50 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது.

இந்நிலையில், எனக்கு சொந்தமான 1.50 ஏக்கர் விவசாய நிலத்தை அதே ஊரில் உள்ள எனது உறவினர்களிடம் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு குத்தகைக்கு விட்டேன். ஆனால், எனது நிலத்துக்கு அவர்கள் போலியாக ஆவணங்களை தயாரித்து வேறு நபருக்கு விற்றுவிட்டனர். இது நாளடைவில் எனக்கு தெரியவந்தது. இது குறித்து உறவினர்களிடம் கேட்டபோது என்னை மிரட்ட தொடங்கினர்.

இது குறித்து வாணியம்பாடி காவல் நிலையம், வட்டாட்சியர் அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் என பலரிடம் பலமுறை மனு கொடுத்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது எனக்கு நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இங்கு வந்துள்ளேன்’’ என்றார்.

விவசாயி நாராயணசாமியின் குறை களை கேட்ட ஆட்சியர், அவரிடம் இருந்த மனுவை பெற்று, இது தொடர்பாக நானே நேரிடையாக வந்து விசாரணை நடத்தி நிலத்தை மீட்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x