Published : 01 Aug 2022 03:35 PM
Last Updated : 01 Aug 2022 03:35 PM

நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் தேர்தல் ஆணையம் செயல்பட வேண்டும்: ஆதார், வாக்காளர் அட்டை இணைப்பில் திமுக கருத்து

சென்னை:" வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் நடைமுறைக்குப் பின்னர், ஒரு முழுமையான வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் உருவாக்கும் என்ற நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் செயல்பட வேண்டும்" என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில், வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பாக தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் இன்று ஆலோசனை நடத்தப்பட்டது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தலைமையில் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அங்கீகரிப்பட்ட அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பிரநிதிகள் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்திற்குப் பின்னர், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்," வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடியை போக்கிவிட்டால், சட்டம் ஒழுங்கு பிரச்சினை சீர்செய்யப்படும். அதனால், தேர்தலை சுமுகமாக நடைபெற ஏதுவாக இருக்கும் என்று திமுக சார்பில் எங்களது கருத்தை தெரிவித்தோம்.

வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது மட்டுமல்ல, வாக்காளர் அடையாள அட்டை இல்லாமல் வாக்களிக்க தேர்தல் ஆணையம் பல சான்று ஆவணங்களை வெளியிட்டுள்ளனர். ஆதார் அட்டை இருந்தால், அதனை இணைக்கலாம். இல்லையென்றால், ஏற்கெனவே கூறியுள்ள அந்த 12 ஆவணச் சான்றுகளை இணைத்துக் கொள்ளலாம் என தகவல் தெரிவித்துள்ளனர்.

எனவே இதன்பின்னர், ஒரு முழுமையான வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் உருவாக்கும் என்ற நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் தேர்தல் ஆணையம் செயல்பட வேண்டும்.

வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது குறித்து திமுகவின் நிலைப்பாடு குறித்து ஏற்கெனவே கூறிவிட்டோம். ஒரே நபருக்கு 5 ஆதார் அட்டை உள்ளது. நாடாளுமன்றத்தில் மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் 5 கோடி போலி ஆதார் அட்டைகள் பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

போலி ஆதார் அட்டைகள் பிடிபட்டுள்ளது என்றால், போலியானவை ஏராளமாக இருக்கிறது என்றுதானே அர்த்தம். நல்ல நோட்டு இருந்தால் கள்ள நோட்டு இருக்கும். எனவே அந்த நிலை வந்துவிடமால் தூய்மையான வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும்.

கடந்த நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலின் போது, இறந்தவர்களின் பெயர்கள், குடிபெயர்ந்து சென்றவர்களின் பெயர்களை நீக்க வேண்டும் என்று திமுக ஏற்கெனவே தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை மனு அளித்திருக்கிறோம்.

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது குறித்து ஒரு சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நிறைவேற்றப்பட்டுள்ள அந்த சட்டத்தில் எந்தெந்த நடைமுறைகளை செயல்படுத்த வேண்டும் என்று எங்களது கருத்தை தெரிவித்தோம்" என்று கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x