Last Updated : 01 Aug, 2022 01:44 PM

 

Published : 01 Aug 2022 01:44 PM
Last Updated : 01 Aug 2022 01:44 PM

‘புதுச்சேரி நகரெங்கும் பேனர்கள்’ - கண்திறந்து பார்க்குமாறு ஆட்சியருக்கு பூதக்கண்ணாடியை அனுப்பிவைத்த அதிமுக நிர்வாகி

புதுச்சேரி: புதுச்சேரி நகரெங்கும் வைக்கப்பட்டுள்ள பேனர்களை கண் திறந்து பார்க்குமாறு பூத கண்ணாடியுடன் மாவட்ட ஆட்சியருக்கு புதுச்சேரி மாநில அதிமுக துணை செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான வையாபுரி மணிகண்டன் மனு தந்துள்ளார்.

புதுச்சேரியில் பேனர் தடை சட்டம் அமலில் உள்ளது. ஆனால், நகரெங்கும் பேனர்கள் விதிமீறி வைக்கப்படுகின்றன. குறிப்பாக திருமணம், பிறந்தநாள், கட்சி நிகழ்வுகள் ஆகியவற்றுக்கு அரசியல் பிரமுகர்களை வரவேற்று பலரும் பேனர்கள் வைக்கின்றனர். தற்போதும் நகரெங்கும் பேனர்கள் அதிகளவில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், அதிமுக துணைச்செயலர், ஆட்சியர் வல்லவனுக்கு பூதகண்ணாடியுடன் இன்று அளித்துள்ள மனு விவரம்: ''கடந்த ஜூன் மாதம் அதிமுகவை சேர்ந்த நிர்வாகியின் இல்ல விழாவில் பேனர் வைக்கப்பட்டது. அன்றைய தினம் புதுச்சேரியில் பல்வேறு இடங்களில், நுற்றுக்கும் மேற்பட்ட பேனர்கள் வைக்கப்பட்டிருந்தாலும், அதிமுகவை சேர்ந்த நிர்வாகிகள் மீது மட்டும் ஆட்சியர் உத்தரவின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விசாரித்தபோது, அன்றைய தினத்தில் அதிமுக நிர்வாகி மீது மட்டும் ஒரே ஒரு பேனர் வைத்த வழக்குப்பதிவு செய்யப்பட்டது தெரியவந்தது.

திறந்தவெளி விளம்பரங்கள், பேனர்கள் தடை சட்டம் 2009 இன்று வரை அமலில்தான் உள்ளது. சென்னை உயர் நீதிமன்றமும், பேனர்கள் வைக்க தடையை பின்பற்ற வேண்டும் என பிறப்பித்த உத்தரவும் அமலில்தான் உள்ளது. இத்தகைய சூழலில் புதுச்சேரி முழுவதும் தற்போது ஆயிரக்கணக்கான பேனர்கள், கட்அவுட்டுகள் பிரதான சாலைகளில் வைக்கப்பட்டுள்ளது. நாள்தோறும் பிரதான சாலைகளில் பயணம் செய்யும் ஆட்சியருக்கு, புதுச்சேரியில் வைக்கப்பட்டுள்ள கட்அவுட், பேனர்கள் கண்களுக்கு தெரியவில்லையா? ஆட்சியருக்கு சமீபகாலமாக கண் பார்வையில் குறைபாடு ஏற்பட்டு உள்ளதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

எனவே அதிமுக சார்பில் பூதக்கண்ணாடியை இந்த மனுவுடன் இணைத்து அனுப்பியுள்ளோம். இந்த பூத கண்ணாடியின் உதவியோடு மாவட்ட ஆட்சியர் புதுச்சேரி பிரதான சாலைகளில் வைக்கப்பட்டுள்ள பேனர்களை கண் திறந்து பார்க்க வேண்டும். பூத கண்ணாடியின் உதவியோடு பேனர் தடை சட்டத்தை பார்க்க வேண்டும். பூத கண்ணாடியின் உதவியோடு உயர் நீதிமன்ற தீர்ப்பை வாசித்து பார்க்க வேண்டும்.

சட்டம் என்பது அனைவருக்கும் சமம் என்பதை பொறுப்பு மிக்க கலெக்டர் உணர்வார் என நம்புகிறோம். அரசாங்கத்தில் இருக்கும் அரசியல் பிரமுகர்களின் காழ்ப்புணர்ச்சிக்காக, அவர்களின் அழுத்தத்தின் காரணமாக சட்டத்தை ஒரு தலைபட்சமாக பயன்படுத்துவது அதிகார துஷ்பிரயோகம். உயர் நீதிமன்ற உத்தரவினை மீறி புதுச்சேரியில் வைக்கப்பட்டுள்ள கட்அவுட், பேனர்களை அகற்ற கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு ஆளாக நேரிடும் என்பதை புதுச்சேரி மாநில அதிமுக சார்பில் பூத கண்ணாடி வழங்கி, எச்சரிக்கை உணர்வோடு உணர்த்துகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x