Published : 01 Aug 2022 07:20 AM
Last Updated : 01 Aug 2022 07:20 AM
சென்னை: மாணவர்கள், ஆசிரியர்களுக்கான வருகைப்பதிவை இன்று முதல் செயலியில் மட்டுமே பதிவுசெய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் 37,554 அரசுப் பள்ளிகளில் 52.75 லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர். ஏறத்தாழ 2.25 லட்சம் ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்.
ஆசிரியர் வருகைப்பதிவைக் கண்காணிக்க ‘டிஎன் ஸ்கூல்ஸ்’ என்ற செல்போன் செயலியை பள்ளிக்கல்வித் துறை 2019-ம் ஆண்டில் கல்வித் துறை அறிமுகம் செய்தது. இதன் வழியாக ஆசிரியர்கள், மாணவர்கள் வருகைப்பதிவு மேற்கொள்ளப்பட்டது.
பின்னர், ஆசிரியர் பணிப் பதிவேடு, வருகைப்பதிவு, மாணவர்விவரம் உள்ளிட்ட விவரங்களை ஒருங்கிணைக்க டிஎன்எஸ்இடி (TNSED) என்ற மேம்படுத்தப்பட்ட செயலியை தமிழக அரசு கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது. இதன்மூலம் வருகைப்பதிவு உள்ளிட்டஅலுவல் செயல்பாடுகளை ஆசிரியர்கள் மேற்கொண்டுவருகின்றனர். இந்த தகவல்களை துறை அதிகாரிகளால் நேரடியாக கண்கணிக்க முடியும்.
இந்நிலையில், “மாணவர்கள், ஆசிரியர்களுக்கான வருகைப்பதிவை இன்று (ஆகஸ்ட் 1) முதல்செயலியில் மட்டுமே பதிவுசெய்தால் போதுமானது. மேலும், விடுப்பு, முன்அனுமதி ஆகியவற்றையும் ஆசிரியர்கள் செயலி வழியாகவே மேற்கொள்ள அறிவுறுத்த வேண்டும்” என்று அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை வாயிலாக பள்ளிக்கல்வி ஆணையரகம் உத்தரவிட்டுள்ளது.
ஆசிரியர்கள் அதிருப்தி
எனினும், இந்த அறிவிப்பு ஆசிரியர்கள் மத்தியில் பரவலான அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சிலர் கூறும்போது, “மாணவர்களின் வருகைப்பதிவை முதலில் பதிவேட்டில் பதிவுசெய்து, பின்னர் செயலியில் பதிவேற்றும் நடைமுறை தற்போது கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்தபுதிய நடைமுறை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு பள்ளிகளுக்கு இன்னும் கிடைக்கவில்லை. எனினும்,இது தேவையில்லாத ஒன்றாகும். அலுவல் நேரம்தான் வீணாக விரயமாகும்.
ஒருபுறம் ஆசிரியர்கள் வகுப்பறையில் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கின்றனர். மறுபுறம் வருகைப்பதிவை செயலியில் மட்டுமே பதிவுசெய்ய உத்தரவிடுகின்றனர்.
இத்தகைய முரண்பாடுகளே தற்போது பெரும் சிக்கலை ஏற்படுத்துகின்றன. இத்தகைய அலுவல் பணிகளைத் தவிர்த்து, ஆசிரியர்களை முறையான கற்பித்தலுக்குப் பயன்படுத்த பள்ளிக்கல்வித் துறை முன்வர வேண்டும்’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT