

முதுமலை வனப்பகுதியில் கடந்தாண்டு அக்டோபர் மாதம் மனிதர்கள் மற்றும் கால்நடைகளை தொடர்ந்து தாக்கிக் கொன்ற ‘டி23’ புலியை 21 நாட்கள் போராட்டத்துக்குப் பின்னர் மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் உயிருடன் பிடித்தனர்.
இப்பணியில் வேட்டைத் தடுப்புக் காவலர்களும், பழங்குடியினருமான பொம்மன், மாதன், மீன காலன் ஆகியோரின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். மூவருக்கும் உரிய அங்கீகாரம் கிடைக்க வேண்டுமென தேசிய புலிகள் பாதுகாப்புஆணையத்துக்கு, தமிழக வனத்துறை பரிந்துரை செய்திருந்தது.
இந்நிலையில், பொம்மன், மாதன், மீன காலன் ஆகியோருக்கு மகாராஷ்டிரா மாநிலம் சந்திராப்பூர் ஃபாரஸ்ட் அகாடெமியில் கடந்த 29-ம் தேதி நடைபெற்ற விழாவில் மத்திய வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சர் புபேந்திர யாதவ் விருதை வழங்கினார். மூவருக்கும் விருது மற்றும் ரூ.1 லட்சம் ஊக்கப் பரிசு வழங்கப்பட்டது. அப்போது, தமிழக கூடுதல் தலைமை வனப்பாதுகாவலர் ஆகாஷ் தீபக் பருவா உடனிருந்தார்.
இது குறித்து முதுமலை புலிகள் காப்பககள இயக்குநர் டி.வெங்கடேஷ் கூறும்போது, ‘‘வேட்டைத் தடுப்புக் காவலர்களுக்கு விருதுகள் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இது சக பணியாளர்களுக்கு ஊக்கத்தை அளிக்கும்,’’ என்றார்.