

சென்னை: அரசு விரைவுப் பேருந்துகளில் பார்சல் அனுப்புவதற்கான முன்பதிவு தொடங்கியுள்ளதாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக அவர்கள் கூறியதாவது: தமிழக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் 1,110 பேருந்துகளில் பயணிப்போரின் பொருட்களை வைக்க, பேருந்தின் பக்க வாட்டில் 2 சுமைப் பெட்டி,பின்னால் ஒரு சுமைப் பெட்டி என 3 சுமைப் பெட்டிகள் உள்ளன.
ஆக. 3-ம் தேதிமுதல் அமல்
இவற்றை நாள் மற்றும் மாத அடிப்படையில் வாடகைக்கு விடும் திட்டம் ஆகஸ்ட் 3-ம் தேதிமுதல் அமலாகும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் அறிவித்திருந்தார். அதன்படி, வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் சுமைப்பெட்டியை வாடகைக்குப் பெறுவதற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.
தூரத்துக்கு ஏற்ப கட்டணம்
சென்னை - திருச்சிக்கு ஒருநாள் வாடகையாக (80 கிலோவரை) ரூ.210-ம், மாத வாடகையாக ரூ.6,300-ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேபோல மதுரை, நாகர்கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பார்சல்களை எடுத்துவர, தூரத்துக்கு ஏற்ப கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. யுபிஐ முறையில் கட்டணம் செலுத்தும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பார்சல் அனுப்ப ஏராளமான வியாபரிகள் மற்றும் பொதுமக்கள் முன்பதிவு செய்து வருகின்றனர். இத்திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேபோல, பேருந்துகளில் கூரியர் அனுப்பும் திட்டமும் செயல்படுத்தப்பட உள்ளது. தமிழகம் முழுவதும் விரைவுப் பேருந்துகளில் கூரியர் அனுப்ப ரூ.50-ம் (250 கிராம்), ஆந்திரா, கர்நாடகா, கேரளாவுக்கு அனுப்ப ரூ.75-ம் (250 கிராம்) வசூலிக்கப்படும்.
இதுகுறித்த விவரங்களை அந்தந்தப் பகுதியில் உள்ள விரைவுப் போக்குவரத்துக் கழகஅலுவலகத்தில் கேட்டுப் பெறலாம். இதுதவிர, பொறுப்பு அதிகாரிகளின் தொலைபேசி எண்களும் விரைவுப் பேருந்துகளில் விளம்பரமாக வெளியிட்டுள்ளோம். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.