Published : 01 Aug 2022 07:10 AM
Last Updated : 01 Aug 2022 07:10 AM

செங்கல்பட்டு அருகே பாலாற்றில் குளித்தபோது விபரீதம்: நீரில் மூழ்கி 2 சிறுமிகள் உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

சிவசங்கரி

மதுராந்தகம்: செங்கல்பட்டு அடுத்த படாளம் அருகே பலாற்றில் குளித்த செங்குன்றத்தைச் சேர்ந்த 2 சிறுமிகள் நீரில் முழ்கி உயிரிழந்தனர். அவர்களை காப்பாற்ற சென்றவரும் மாயமானார். பல மணிநேர தேடலுக்குப் பிறகு அவரும் சடலமாக மீட்டக்கப்பட்டார்.

சென்னையை அடுத்த செங்குன்றம் பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர், தனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன், திருவண்ணாமலை மாவட்டம் மேல்மலையனூரில் உள்ள அங்காளம்மன் கோயிலுக்குச் சென்றுவிட்டு நேற்று காலை வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். செங்கல்பட்டு அருகே படாளம் பகுதியில் வந்தபோது மாமண்டூர் பாலாற்றில் இறங்கி குளித்ததாகத் தெரிகிறது.

அப்போது, சதிஷ் என்பவரின் மகள் வேத (10) மற்றும் குமரேசன் மகள் சிவசங்கரி (15) ஆகிய இருவரும் ஆழமான பகுதிக்குச் சென்றதால் நீரில் முழ்கியதாகத் தெரிகிறது.

இவர்களின் அலறல் சத்தம் கேட்டு, சீனிவாசன் (44) என்பவர் சிறுமிகளை காப்பாற்ற நீரில் இறங்கினார். அப்போது அவரும் நீரில் முழ்கியதாகக் கூறப்படுகிறது. காப்பாற்றச் சென்றவரும் மாயமானதால் உறவினர்கள் பதற்றமடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த படாளம் போலீஸார் மற்றும் செங்கல்பட்டு தீயணைப்பு மீட்பு படையினர் விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

இதில், சிறுமிகள் இருவரின் உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், நீரில் முழ்கிய சீனிவாசனை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். பல மணிநேர தேடலுக்குப் பிறகு அவரும் சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து படாளம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

பாலாற்றில் தேங்கியுள்ள தண்ணீரில் குளிக்க வேண்டாம் என எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டும், இதுபோன்ற உயிரிழப்பு சம்பவங்கள் நடக்கின்றன. அதனால், பொதுமக்கள் பாலாறு உள்ளிட்ட நீர் நிலைகளில் குளிப்பதை தவிர்க்குமாறு வருவாய்த் துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x