Published : 25 Oct 2016 09:13 AM
Last Updated : 25 Oct 2016 09:13 AM
பட்டாசு கடைகள் அமைப்பதில் விதி மீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டால், கடை அனுமதி உடனடியாக ரத்து செய்யப்படும் என்று சென்னை தெற்கு மாவட்ட தீயணைப்புத் துறை அதிகாரி என்.விஜயகுமார் தெரிவித்தார். சென்னையில் பல இடங்களில் பெட்ரோல் பங்க், பள்ளி அருகே பட்டாசு கடைகள் அமைக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவகாசி பைபாஸ் சாலையில் உள்ள பட்டாசு கடையில் கடந்த 20-ம் தேதி பட்டாசு பண்டல்களை இறக்கும்போது பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. விபத்தில் புகை மண்டலம் பரவியதில், அருகே உள்ள மருத்துவப் பரிசோதனை மையத்தில் இருந்த 6 பெண்கள் உட்பட 9 பேர் மூச்சுத்திணறி உயிரிழந்தனர். அடுத்த நாளான 21-ம் தேதி, கோவை காந்தி பார்க் தடாகம் ரோடு பகுதியில் பட்டாசு வெடித்து 2 மாடிக் கட்டிடம் தீப்பற்றியது. இதில் ஒருவர் பலியானார்.
இதுபோன்ற சம்பவங்கள் இனி நடந்துவிடக்கூடாது. அதற்கேற்ப, பட்டாசு கடைகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று தீயணைப்புத் துறை கூடுதல் டிஜிபி குடவாலா உத்தரவிட்டுள்ளார். பட்டாசு கடைகளுக்கான விதிமுறைகளை மீறுவோரின் உரிமத்தை ரத்து செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இது ஒருபுறம் இருக்க, ராயப்பேட்டை ஒய்எம்சிஏ வளாகம், கொட்டிவாக்கம் ஓஎம்ஆர் சாலை உட்பட சென்னையில் பல இடங்களிலும் பெட்ரோல் பங்க், பள்ளிகள் அருகே பட்டாசு கடைகள் அமைக்கப்பட்டிருப்பது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தீயணைப்புத் துறை அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து, அத்தகைய பட்டாசு கடை களை அகற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதிகாரி விளக்கம்
இதுபற்றி சென்னை தெற்கு மாவட்ட தீயணைப்புத் துறை அதிகாரி என்.விஜயகுமார் கூறிய தாவது:
பட்டாசு கடை அமைக்க எங்களிடம் ஓர் இடத்தைக் குறிப்பிட்டு மனு கொடுக்கின்றனர். நாங்கள் அனுமதி கொடுத்த பிறகு, அந்த இடத்தில் இல்லாமல் வேறு இடத்தில் கடை வைக்கின்றனர். இப்படி சிலமுறை நடந்துள்ளது.
270 சதுர அடியில் மட்டுமே பட்டாசு கடை அமைக்க வேண்டும். அதிக அளவில் பட்டாசுகளை தேக்கி வைக்கக் கூடாது. பள்ளி, மருத்துவமனை, பெட்ரோல் பங்க், வழிபாட்டுத் தலங்கள், மின் விநியோக பெட்டிகள் அருகே பட்டாசு கடை அமைக்க அனுமதி கிடையாது. வாடிக்கையாளர்களுக்கு கடை யில் வைத்து பட்டாசுகளை வெடித்துக் காட்ட கூடாது. கடைக்கு உள்ளே செல்லவும், வெளியே செல்லவும் தனித்தனி வழி அமைக்க வேண்டும் என பல்வேறு விதிமுறைகள் உள்ளன.
இதில் விதிமீறல்கள் நடக்கிறதா என்று விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, ஆய்வு செய்யும் பணியும் தொடங்கியுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னையில் பட்டாசு கடை அமைக்க இம்முறை 1,060 பேர் விண்ணப்பித்துள்ளனர். 930 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 128 பேரின் மனுக்கள் பரிசீலனையில் உள்ளன. 2 பேருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT