தமிழக சர்க்கரை ஆலைகளில் எத்தனால் உற்பத்திக்கு அனுமதியளிக்க வேண்டும்: ராமதாஸ்

தமிழக சர்க்கரை ஆலைகளில் எத்தனால் உற்பத்திக்கு அனுமதியளிக்க வேண்டும்: ராமதாஸ்
Updated on
2 min read

தமிழக சர்க்கரை ஆலைகளில் எத்தனால் உற்பத்திக்கு அனுமதியளிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை ஆலைகள் நஷ்டத்தில் இயங்குவதால், கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்க முடியவில்லை என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து சர்க்கரை ஆலைகளையும் லாபத்தில் இயங்கச் செய்வதற்கான மிகச்சிறந்த வாய்ப்பை தமிழகத்தை ஆளும் அதிமுக அரசு தாரை வார்த்துக் கொண்டிருக்கிறது.

இந்தியாவில் பெட்ரோலில் 5% அளவுக்கு எத்தனால் கலந்து விற்பனை செய்யும் திட்டத்தின் கீழ் வரும் டிசம்பர் மாதம் முதல் அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் வரையிலான ஒராண்டில் 280.89 கோடி லிட்டர் எத்தனாலை கொள்முதல் செய்ய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன. இதற்கான ஒப்பந்தப்புள்ளி அறிவிக்கையை பாரத் பெட்ரோலிய நிறுவனம் நேற்று வெளியிட்டுள்ளது.

அதன்படி தமிழகத்தின் தேவைக்காக மட்டும் 22 கோடியே 40 லட்சத்து 40 ஆயிரம் லிட்டர் எத்தனால் கொள்முதல் செய்யப்படவுள்ளது. ஆந்திராவில் 12.90 கோடி லிட்டர், தெலுங்கானாவில் 13.60 கோடி லிட்டர், கர்நாடகத்தில் 22.10 கோடி லிட்டர், கேரளத்தில் 15.50 கோடி லிட்டர் என தென் மாநிலங்களில் மட்டும் 86.50 கோடி லிட்டர் எத்தனால் கொள்முதல் செய்யப்படவுள்ளது. அதிகபட்சமாக லிட்டர் ரூ.39 என்ற விலையில் எத்தனால் கொள்முதல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், எந்த சர்க்கரை ஆலை அதை விட குறைந்தவிலைக்கு எத்தனால் வழங்க ஒப்புக்கொள்கிறதோ, அந்த ஆலைக்கு ஒப்பந்தம் வழங்கப்படும். எத்தனால் விற்பனை மூலம் லாபம் ஈட்ட இது சிறந்த வாய்ப்பாகும்.

ஆனால், இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளும் நிலையில் தமிழகத்திலுள்ள சர்க்கரை ஆலைகள் இல்லை என்பது தான் உண்மை. தமிழ்நாட்டில் மொத்தம் 46 சர்க்கரை ஆலைகள் உள்ளன. இவற்றிலிருந்து ஆண்டுக்கு 50 கோடி லிட்டர் எத்தனாலை உற்பத்தி செய்ய முடியும். ஆனால், இவை எத்தனாலை உற்பத்தி செய்ய அரசு தடை விதித்திருக்கிறது.

தமிழகத்தில் 8 சர்க்கரை ஆலைகளுக்கு மட்டும் தான் எத்தனால் உற்பத்தி செய்ய அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இவற்றில் ஆண்டுக்கு 9 கோடி லிட்டர் எத்தனால் உற்பத்தி செய்ய முடியும் என்ற போதிலும், 50 லட்சம் லிட்டர் அளவுக்கு மட்டுமே எத்தனால் உற்பத்தி செய்ய வேண்டும் என்று தமிழக அரசு கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. இது மிகவும் குறைந்த அளவு என்பதால் வெளிச்சந்தையில் உரிய விலைக்கு விற்க முடியவில்லை.

தமிழகத்தில் அனைத்து சர்க்கரை ஆலைகளிலும் முழு அளவில் எத்தனால் தயாரித்து விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்டால், மொத்தம் 50 கோடி லிட்டரையும் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் விற்பனை செய்ய முடியும். அதன்மூலம் ரூ.1950 கோடி கூடுதல் வருவாய் ஈட்ட முடியும். தமிழகத்தில் கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் மொத்தம் ரூ.1050 கோடி நிலுவைத்தொகை வழங்க வேண்டியிருக்கிறது.

சர்க்கரை ஆலைகள் மட்டும் எத்தனால் உற்பத்தி செய்ய அனுமதிக்கப்பட்டால் ஒரே ஆண்டில் ஒட்டுமொத்த நிலுவைத் தொகையையும் கொடுத்துவிட முடியும். அதுமட்டுமின்றி, கரும்புக்கான கொள்முதல் விலையையும் உயர்த்தி வழங்கி விவசாயிகளை மகிழ்ச்சிப்படுத்த முடியும்.

தமிழக ஆட்சியாளர்கள் நினைத்தால் ஒற்றை ஆணையில் இத்தனை நன்மைகளையும் சாத்தியமாக்க முடியும். ஆனால், கடந்த பல ஆண்டுகளாக தமிழகத்தை ஆட்சி செய்து வரும் அதிமுகவும், திமுகவும் சுயநலத்துடன் எத்தனால் உற்பத்திக்கு அனுமதி அளிக்க மறுத்து வருகின்றன.

தமிழகத்தில் உள்ள சர்க்கரை ஆலைகள் முழு அளவில் எத்தனால் தயாரிக்கத் தொடங்கினால், அதன்பின்னர் அதிமுக மற்றும் திமுக நிர்வாகிகளும், தலைமைக்கு நெருக்கமானவர்களும் நடத்தி வரும் மது ஆலைகளில் மது உற்பத்திக்குத் தேவையான மொலாசஸ் கிடைக்காது என்பது தான் இதற்கு காரணம். தமிழகத்தில் விற்கப்படும் மதுவகைகள் அனைத்தும் மட்டமான மொலாசஸ் எனப்படும் கரும்புக் கழிவிலிருந்து தான் உற்பத்தி செய்யப்படுகின்றன என்பதாலேயே, அனைத்து ஆலைகளும் மொலாசஸ் உற்பத்திக்கு மட்டுமே முன்னுரிமையளிக்க வேண்டும்; எத்தனால் தயாரிக்கக் கூடாது என தடை போடப்பட்டுள்ளது.

எத்தனால் உற்பத்தி என்பது சர்க்கரை ஆலைகளுக்கு கிடைத்த கற்பகவிருட்சம் ஆகும். போதிய அளவில் எத்தனால் உற்பத்தியும், கரும்புக் கழிவுகளில் இருந்து மின்சாரம் உள்ளிட்ட பொருட்களும் தயாரிக்கப்பட்டால் ஒரு டன் கரும்பிலிருந்து ரூ.21,000 வருவாய் ஈட்ட முடியும். இப்போது பெட்ரோலில் மட்டுமே 5% எத்தனால் கலக்க அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், வரும் ஆண்டுகளில் பெட்ரோலில் 22.5% அளவுக்கும், டீசலில் 15% அளவுக்கும் எத்தனால் சேர்க்க அனுமதி அளிக்கலாம் என மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. இது செயல்வடிவம் பெற்றால் கரும்பு விவசாயமும், கரும்பு ஆலைத் தொழிலும் அதிக லாபம் கொட்டும் தொழிலாக மாறும் என்பதில் எந்த சந்தேகத்திற்கும் இடமில்லை.

2016ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அதிமுகவின் தேர்தல் அறிக்கையில், ''சர்க்கரை ஆலைகளில் எத்தனால் உற்பத்தி ஊக்குவிக்கப்படும். இதனால் சர்க்கரை ஆலைகள் லாபம் ஈட்டி கரும்பு உற்பத்தியாளர்கள் பயன்பெறுவர்'' என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. அது உண்மையாக இருந்தால், அடுத்த சில நாட்களில் தொடங்கவுள்ள கரும்பு அரவைப்பருவத்தில் எத்தனால் உற்பத்தி செய்ய அரசு அனுமதி தர வேண்டும். எண்ணெய் நிறுவனங்கள் கோரியுள்ள ஒப்பந்தப்புள்ளியில் விவசாயிகள் பங்கேற்க வசதியாக இதற்கான அறிவிப்பை தமிழக அரசு உடனடியாக வெளியிட வேண்டும்'' என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in