

சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று இரவு நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விருது வழங்கும் விழாவில் அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பேசியதாவது:
விருதாளரான சித்தராமையா ஏன் பிரதமராகக் கூடாது? அவருக்கு ஒரு தொலைநோக்கு பார்வை உள்ளது. இதை நான் சர்ச்சைக்காக கூறவில்லை. அவர் வலிமைமிக்க ஒரு தலைவர். இப்படிப்பட்ட பார்வை உள்ளவர்கள்தான் அதிகாரத்தில் அமர வேண்டும்.
விசிக, காங்கிரஸ் கட்சிகளுக்கு மட்டும் அல்ல, ஒட்டுமொத்த தேசத்துக்கு எதிரானவர்கள் பாஜகவினர். அவர்கள் மறுபடியும் ஆட்சிக்கு வருவது ஆபத்தானது. இதை இன்னும் உணராமல் இருக்கிறது பெரும்பான்மை இந்து சமூகம். அவர்களுக்கும் எதிரானதுதான் பாஜக. பாஜகவின் உண்மையான எதிரி அரசியலமைப்பு சட்டம்தான். பாஜக எண்ணம் நிறைவேறாமல் இருப்பதற்கு காரணம், சட்டத்தில் கூறப்பட்டு இருப்பவைதான். கருத்தியலுக்கு எதிரான யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது. எனவே தான் சித்தராமையா போன்ற தலைவர்கள் தேவைப்படுகிறார்கள். யாரும் செய்யாத சாதனையைப் படைத்து இந்த விருதை அவர் பெற்றிருக்கிறார்.
காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறார் திருமா என விமர்சித்தாலும், காங்கிரஸுடன் இணைந்து தீயசக்திகளை அழிக்க வேண்டும். அம்பேத்கரை அவர்கள் இந்துத்துவ தலைவர் என்கின்றனர். நாம் இந்துக்கு எதிரானவர்கள் அல்ல. பாஜக ஆர்எஸ்எஸ்-க்கு எதிரனவர்கள். முஸ்லிம்களை பகடைக்காயாக பயன்படுத்தி இந்துக்களை எதிரி ஆக்குக்கின்றனர்.
பாஜக இந்துக்கான அரசு அல்ல. அதானி, அம்பானிக்கான அரசு. ஆர்எஸ்எஸ் பார்வையில் மோடி, அமித்ஷா, குடியரசுத் தலைவர் முர்மு ஆகியோர் கூட தாழ்த்தப்பட்டவர்கள்தான். அவர்கள்தான் பாஜகவை எதிர்த்து போராட வேண்டும். மீண்டுக்கு பாஜகவை ஆட்சிக்கு வராமல் தடுப்பது ஜனநாயக சக்திகளின் கடமை. மொழி வழியில் தேசியம் பார்ப்பவர்கள். ஆர்எஸ்எஸ்ஐ எதிராக பார்ப்பதில்லை.
இரு அணிகள் மட்டுமே இருக்க வேண்டும். மூன்றாவது அணிகள் வேண்டாம். எங்களால் தமிழகத்தில் பாஜகவை தோற்கடிக்க முடியும். அதிமுகவுடன் இருப்பதால் இங்கு காலூன்ற முடியும் என பாஜக நினைக்கிறது. எங்களுக்கு பதவிக்கு வருவதல்ல நோக்கம். நாட்டை, மக்களை காக்க வேண்டும். மக்களை காப்பதற்கான ஆயுதம் சட்டம் தான். அதை நாம் பாதுகாக்க வேண்டும். மறுபடியும் ஆட்சிக்கு வந்தால் நள்ளிரவு நேரத்தில் சட்டத்தை மாற்றிவிட்டோம் என பாஜக சொன்னாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. அவர்கள் அதை செய்ய தயங்கமாட்டார்கள்.
பாஜகவை காங்கிரஸ் இல்லாமல் ஏதும் செய்யமுடியாது. தேசிய அளவில் காங்கிரஸுடன் இணைந்துதான் பாஜகவை அழிக்க முடியும். நாடாளுமன்ற உறுப்பினர்களின் எதிர்ப்பையும் மீறி அனைத்து சட்டங்களையும் நிறைவேற்றினர். சமூக நீதி கருத்தியலை உடைக்கவே பொருளாதார பிற்படுத்தப்பட்டோருக்கான ஒதுக்கீட்டு சட்டம் கொண்டு வரப்பட்டது. இவ்வாறு திருமாவளவன் பேசினார்.