Last Updated : 10 Oct, 2016 10:12 AM

 

Published : 10 Oct 2016 10:12 AM
Last Updated : 10 Oct 2016 10:12 AM

எந்தக் கூட்டணியும் ஆயுட்கால கூட்டணி இல்லை: சர்ச்சைகளுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் விளக்கம்

கூட்டணியில் இருப்பவர்கள் ஒரே கருத்தை சொல்ல வேண்டும் என்பதில்லை. ஆயுட்கால கூட்டணி என்று எதுவும் கிடையாது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.

மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டுள்ள முதல்வரின் உடல் நலம் குறித்து விசாரிப்பதற்காக கடந்த வெள்ளிக்கிழமை சென்னை வந்த காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, கூட்டணியில் உள்ள திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்காமல் டெல்லி திரும்பினார். தமிழகத்தில் பொறுப்பு முதல்வரை நியமிக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறியபோது, அது தேவையில்லை என்று திருநாவுக்கரசர் கூறினார்.

உள்ளாட்சித் தேர்தலில் குறைவான இடங்களை காங்கிரஸுக்கு திமுக ஒதுக்கியதால்தான், ஸ்டாலினின் கருத்துக்கு எதிரான கருத்தை திருநாவுக்கரசர் கூறி வருகிறார். இதனால், திமுக - காங்கிரஸ் உறவில் சிக்கல் நிலவுகிறது என செய்திகள் வெளியாகி வருகின்றன. இது தொடர்பாக ‘தி இந்து’வுக்கு திருநாவுக்கரசர் அளித்த சிறப்புப் பேட்டி:

திமுக காங்கிரஸ் கூட்டணியில் முரண்பாடுகள் நிலவுவதாக கூறப்படுகிறதே?

திமுக - காங்கிரஸ் உறவு எப்போதும் போலத்தான் உள்ளது. அதில் எந்தச் சிக்கலும் இல்லை.

உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸுக்கு குறைவான இடங்களை ஒதுக்கியதுடன், அந்த இடங்களிலும் திமுகவினர் மனு தாக்கல் செய்தார்களே?

உள்ளாட்சியில் சுமார் 20 ஆயிரம் பதவிகளுக்குக் கட்சி சின்னத்தில் போட்டியிட வேண்டும். இத்தனை இடங்களை பிரித்துக் கொள்வதற்கு தலைவர்கள் மட்டும் பேச்சுவார்த்தை நடத்த முடியாது. எனவே, இரு தரப்பிலும் குழுக்கள் அமைக்கப்பட்டன. கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் காங்கிரஸுக்கு திமுக அதிக இடங்களை ஒதுக்கியது. சென்னை மாநகராட்சியில் 22 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளதால், தொகுதிக்கு தலா 1 வார்டு என்ற அடிப்படையில் 22 வார்டுகள் கேட்டோம். அவர்கள் 14 கொடுத்தனர். பேச்சுவார்த்தை சுமூகமாக எட்டப்படாத இடங்களில் காங்கிரஸ், திமுக என இரு தரப்புமே வேட்பு மனு தாக்கல் செய்தது. இதற்கிடையே, உள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே, மீண்டும் தேர்தல் அறிவிக்கப்படும்போது திமுகவு டன் பேசுவோம்.

சென்னை வந்த ராகுல் காந்தி, திமுக தலைவரை சந்தித்திருக்கலாமே?

ராகுல் காந்தியின் பயணம் அரசியல் சார்பின்றி முழுக்க முழுக்க தனிப்பட்ட பயணமாகவே இருந்தது. உடல்நலம் சரியில்லாத முதல்வரை பார்க்க வரும்போது அரசியல் கூடாது என்று அவர் கூறினார். அதனால்தான் காங்கிரஸ் நிர்வாகிகள் யாரும் விமான நிலையம் மற்றும் மருத்துவமனைக்கு வரவில்லை. தமிழக தலைவர் என்ற முறையில் நான் மட்டுமே சென்றேன். முதல்வரை பார்த்துவிட்டு திமுக தலைவர் கருணாநிதியை பார்த்தால், அது அரசியல் சமநிலையை ஏற்படுத்தும் செயலாக அமைந்துவிடும் என்றே அவர் தவிர்த்தார்.

பொறுப்பு முதல்வர் வேண்டும் என்று மு.க.ஸ்டாலினின் கருத்தில் இருந்து நீங்கள் மாறுபடுகிறீர்களே?

நான் வேறு கட்சி. அவர் வேறு கட்சி. நாங்கள் ஒரே கூட்டணியில் இருக்கிறோம் என்பதால் ஒரே கருத்தை சொல்ல வேண்டுமா என்ன? ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் என்ன கருத்து வேண்டுமானாலும் சொல்லலாம். அந்த அடிப்படையில் தமிழகத்துக்கு பொறுப்பு முதல்வர் தேவையில்லை என்பது காங்கிரஸ் கட்சியின் கருத்து. அதே, நேரத்தில் நிர்வாகம் நன்றாக நடக்க வேண்டும் என்பது எங்கள் எண்ணம்.

திமுக காங்கிரஸ் உறவில் எந்தச் சிக்கலும் இல்லை என்று உறுதியாக கூறுகிறீர்களா?

இன்றைய நிலையில் திமுக - காங்கிரஸ் இடையே எந்தப் பிரச்சினையும் இல்லை. அதே நேரத்தில், எந்தக் கூட்டணியும் ஆயுட்கால கூட்டணி கிடையாது. ஏனென்றால், முன்பு திமுகவுடன் கூட்டணி வைத்திருக்கிறோம். பின்னர், கூட்டணி இல்லாமல் இருந்திருக்கிறோம். இப்போது கூட்டணியில் இருக்கிறோம். அவ்வளவுதான்.

இவ்வாறு திருநாவுக்கரசர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x