

அனைத்து விதமான விவசாயக் கடன் முழுவதையும் மத்திய, மாநில அரசுகள் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசியதாவது:
விவசாயம் பாதிப்பு
தமிழகத்தில் தொடர்ந்து வறட்சி நிலவிவருகிறது. வருகின்ற தீபாவளி பண்டிகையை கொண்டாட விவசாயிகளுக்கும், விவசாயக் கூலி தொழிலாளர்களுக்கும் குடும்பத்திற்கு ரூ.5 ஆயிரம் தமிழக அரசு வழங்க வேண்டும்.
மேலும் உணவுப் பொருட்களையும் குறிப்பாக அரிசி, உளுந்தம் பருப்பு, துவரம் பருப்பு, எண்ணெய் உட்பட அன்றாடத் தேவையான உணவுப் பொருட்களை ரேஷன் கடைகள் மூலம் இலவசமாக கொடுக்க வேண்டும். விவசாயிகளின் அனைத்து விதமான விவசாயக் கடன் முழுவதையும் மத்திய, மாநில அரசுகள் தள்ளுபடி செய்ய வேண்டும்.
நெல்லுக்கு ரூ.3 ஆயிரம் விலை நிர்ணயம்
2016 - 17 ல் மத்திய அரசு நெல்லுக்கு ஆதார விலையாக குவிண்டாலுக்கு - சன்ன ரகத்திற்கு ரூபாய். 1, 510 ம், பொது ரகத்திற்கு ரூபாய். 1,440 ம் விலை நிர்ணயம் செய்துள்ளது. மாநில அரசு ஒரு குவிண்டாலுக்கு ரூபாய். 50 வழங்குகிறது. இவைகள் போதுமானதல்ல. ஒரு குவிண்டால் நெல் உற்பத்தி செய்ய ரூபாய். 2,640 செலவாகிறது என தமிழக வேளாண் பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது. ஒரு குவிண்டால் நெல்லுக்கு 3 ஆயிரம் ரூபாய் விலை நிர்ணயம் செய்ய வேண்டும். மேலும் நெல் கொள்முதல் நிலையங்கள் தேவையான அளவில் அமைத்திட வேண்டும்.
கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகை
மத்திய அரசு கரும்புக்கான ஆதார விலையாக டன்னுக்கு ரூ.2,300 என விலை நிர்ணயம் செய்துள்ளது. மாநில அரசு டன்னுக்கு ரூ.550 கூடுதலாக வழங்கியுள்ளது. ஆக மொத்தம் டன்னுக்கு ரூ. 2,850 என்று விவசாயிகளுக்கு கரும்பு ஆலைகள் வழங்க வேண்டும்.
தமிழகத்தில் 24 தனியார் கரும்பு ஆலைகள், 16 கூட்டுறவு துறை கரும்பு ஆலைகள், 2 பொதுத்துறை ஆலைகள் என மொத்தம் 42 ஆலைகள் இயங்கி வருகின்றன. இவைகளில் 2 ஆலைகள் இயங்காமல் உள்ளன. கூட்டுறவு மற்றும் தனியார் ஆலைகள் கடந்த 2013 - 14, 2014 - 15, 2015 - 16 ஆகிய 3 ஆண்டுகளுக்கு மட்டும் ரூ.2 ஆயிரம் கோடி வழங்க வேண்டும். இதனை விவசாயிகளுக்கு கரும்பு ஆலைகள் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதற்காக தமிழக அரசு விவசாயிகள், அரசு அதிகாரிகள், தனியார் கரும்பு ஆலை அதிகாரிகள் கொண்ட குழு அமைத்து முத்தரப்பு பேச்சு வார்த்தை நடத்தி நிலுவைத் தொகையை உடனடியாக விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.
மத்திய அரசு கரும்பில் இருந்து எடுக்கும் எத்தனாலை பெட்ரோலில் கலந்து எரிபொருளாக பயன்படுத்த தற்போது அனுமதி அளித்துள்ளது. இதனை மத்திய, மாநில அரசுகள் முழுமையாக செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். நெல்லுக்கு 25 ஆயிரம் ரூபாயும், வாழைக்கும், வெற்றிலைக்கும், கரும்புக்கும் 1 லட்ச ரூபாயும் நஷ்ட ஈடாக அரசு வழங்க வேண்டும்.
காவிரி மேலாண்மை வாரியம்
உச்ச நீதிமன்ற தீர்ப்புப்படி 2 ஆயிரம் கன அடி நீரை கர்நாடக அரசு தமிழகத்திற்கு வழங்க வேண்டும். இந்த அளவு தண்ணீர் போதுமானதல்ல. காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனடியாக அமைக்க வேண்டும்.
உள்ளாட்சி நிர்வாகம் தனி அதிகாரிகள் நியமனம்
உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் பதவிக்காலம் 24.10.2016 ல் முடிவடைகிறது. அதற்குள் உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெற்று, புதிய பிரதிநிதிகள் பொறுப்பு ஏற்க வேண்டும். ஆனால் தேர்தல் தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே உள்ளாட்சி நிர்வாகத்தை கவனிக்க தனி அதிகாரிகள் நியமிக்க வழிவகுக்கும் அரசு ஆணையை ஆளுநரின் ஒப்புதலைப் பெற்று அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது ஒரு இடைக்கால ஏற்பாடே ஆகும்.
நீதிமன்ற தீர்ப்பு வந்தவுடன், உள்ளாட்சி தேர்தலை விரைந்து, முறையாக, நேர்மையாக, ஜனநாயக முறைப்படி நடத்தி மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கு மாநில தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
100 நாள் வேலைத்திட்டம்
தமிழகம் முழுவதும் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் வேலை செய்பவர்களுக்கு வழங்கப்படும் ஊதியத் தொகையை அவர்களுக்கு முழுமையாக உரித்த காலத்தில் முறையாக கிடைத்திட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மருத்துவர்கள் நியமனம்
காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு உட்பட்ட அனைத்து அரசு மருத்துவமனைகளில் போதுமான மருத்துவர்கள் நியமிக்கப்பட வேண்டும், தேவையான மருத்துவ உபகரணங்கள் இருப்பில் இருக்க வேண்டும், நோயாளிகளுக்கு சத்தான, தரமான உணவு வழங்கப்பட வேண்டும். ஒப்பந்த அடிப்படை முறையை ரத்து செய்து அரசு ஊழியர்கள் நியமிக்கப்பட வேண்டும்.
110 நாள் வேலைத்திட்டத்தில் பணிபுரிபவர்களுக்கு ஊதியம் முறையாக, முழுமையாக அளிப்பதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நீதிமன்றங்களில் பாதுகாப்பான கட்டிடங்கள், போதிய குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகள், வாகன நிறுத்தங்கள், நூலக வசதி போன்றவற்றை உடனடியாக அமைத்திட வேண்டும்.
செங்கல்பட்டு முதல் காஞ்சிபுரம் வரை சாலையை அகலப்படுத்தி, மேம்படுத்த வேண்டும். வாலாஜாபாத்தில் புறவழிச்சாலை அமைக்கப்பட வேண்டும். கடந்த மழைக்காலங்களில் பாதிக்கப்பட்ட கிராமப்புறச் சாலைகளை உடனடியாக சீர் செய்ய வேண்டும்'' என்று வாசன் பேசினார்.