Published : 31 Jul 2022 04:00 AM
Last Updated : 31 Jul 2022 04:00 AM
வேலூர்/ஆம்பூர்: இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாக சமூகவலைதளங்களில் கருத்துகளைப் பகிர்ந்ததாக, ஆம்பூரைச் சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவரிடம் மத்திய உளவுப் பிரிவு அதிகாரிகள் 10 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தினர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நீலிக்கொல்லை மசூதி தெருவைச் சேர்ந்தவர் மிர் அனாஸ் அலி (22). இவர், ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 3-ம் ஆண்டு பயின்று வருகிறார்.
இந்நிலையில், இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு இவர் ஆதரவளித்து வருவதாகக்கூறி, மத்திய உளவுப் பிரிவு (ஐ.பி.) அதிகாரிகள் குழுவினர் சந்தேகத்தின் அடிப்படையில் நேற்று அதிகாலை அனாஸ் அலியைப் பிடித்து, விசாரணைக்கு உட்படுத்தினர்.
ஆம்பூர் நகர காவல் நிலையத்தில் நடத்தப்பட்ட இந்த விசாரணை குறித்த தகவல் வேகமாகப் பரவியது. இதையடுத்து, பாதுகாப்பு கருதி அவரை வேலூர் மாவட்டம் அணைக்கட்டு காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று, பலத்த பாதுகாப்புடன் விசாரணையைத் தொடர்ந்தனர். சுமார் 10 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடந்தது.
மேலும், சென்னையில் இருந்து நேற்று மாலை வந்த, 3 பேர் கொண்ட தொழில்நுட்பக் குழுவினர் மூலம் அவரது செல்போன், லேப்டாப்களில் உள்ள தகவல்கள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இது தொடர்பாக, மத்திய உளவுப் பிரிவு அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, ‘‘மாணவர் மிர் அனாஸ் அலி, இந்தியாவில் தடை செய்யப்பட்ட சில இயக்கங்களின் கருத்துகளை ஆதரித்தும், அந்த இயக்கங்களைப் பின்தொடர்வதுடன், தடை செய்யப்பட்ட இயக்கங்களின் கருத்துகளை சமூகவலைதளங்களில் பகிர்ந்தும் உள்ளார்.
அவரிடம் இருந்து 2 விலை உயர்ந்த செல்போன்கள், லேப்டாப்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவற்றில் உள்ள விவரங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. தடை செய்யப்பட்ட இயக்கங்களை ஆதரித்து அவர் கருத்து வெளியிட என்ன காரணம் என்றும் விசாரிக்கப்பட்டு வருகிறது’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT