

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே முயல் வேட்டைக்குச் சென்றபோது விவசாய நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி தந்தை, 2 மகன்கள் உயிரிழந்தனர்.
விருதுநகர் மாவட்டம் திருச்சூழி அருகே உள்ள முகவூரைச் சேர்ந்தவர் அய்யனார் என்கிற அய்யங்காளை(52). விவசாயி. இவருக்கு அஜித்(25), சுதந்திரபாண்டியன்(23), ஆடியராஜா(19) ஆகிய 3 மகன்கள் உள்ளனர்.
அஜித் பஞ்சாப் மாநிலத்தில் ராணுவ வீரராக இருந்தார். இவரது மனைவி விஜயலட்சுமிக்கு 15 தினங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து குழந்தையைப் பார்க்க விடுமுறையில் நேற்று முன்தினம் அஜித் ஊருக்கு வந்தார். இந்நிலையில் அன்று நள்ளிரவு அய்யனார், அஜித், சுதந்திரபாண்டியன் ஆகிய மூவரும் அருகேயுள்ள சிவகங்கை மாவட்டம் மாரநாடு பகுதிக்கு முயல் வேட்டைக்குச் சென்றனர்.
அப்போது முத்துக்கருப்பு என்பவரது விவசாய நிலத்தில் நெற்பயிர்களைக் காட்டுப் பன்றிகளிடம் இருந்து பாதுகாக்க அமைக்கப்பட்டிருந்த மின்வேலியை அய்யனார் மிதித்தார். மின்சாரம் தாக்கியதில் அவர் கீழே விழுந்தார். அவரைக் காப்பாற்ற முயன்ற அஜித், சுதந்திரபாண்டியன் மீதும் மின்சாரம் தாக்கியது. இதில் மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
நில உரிமையாளர் முத்துக்கருப்பு, இறந்து கிடந்தவர்களை நேற்று காலை பார்த்தார். இது குறித்து திருப்பாச்சேத்தி போலீஸாரிடம் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் முத்துக்கருப்பனை கைது செய்தனர். உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தில் கோட்டாட்சியர் சுகிதா, வட்டாட்சியர் சாந்தி விசாரணை நடத்தினர். ராணுவவீரர் அஜீத் உடல், ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் காட்டுப் பன்றிகள் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் பயிர்களைக் காப்பாற்ற விவசாயிகள் அனுமதியின்றி மின்வேலிகளை அமைத்துள்ளனர். 3 வாரங்களுக்கு முன்பு மானாமதுரை அருகே பீசார்பட்டினத்தில் மின்வேலியில் சிக்கி ஆட்டோ ஓட்டுநர் உயிரிழந்தார்.
இதுகுறித்து ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி கூறும்போது, ‘சோலார் மின்வேலி அமைக்கத்தான் அனுமதி உள்ளது. அதனால் இறப்புகள் ஏற்படாது. ஆனால் சம்பந்தப்பட்ட விவசாயி இலவச மின்சாரம் மூலம் மின்வேலி அமைத்துள்ளார். இதனால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரது இலவச விவசாய மின் இணைப்பை துண்டிக்கவும், அப்பகுதிகளில் அனுமதி பெறாத மின்வேலிகளை அகற்றவும் மின்வாரியத்துக்கு உத்தரவிட்டுள்ளேன் என்றார்.
இந்த சம்பவம் குறித்து விழுப்புரத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், “காட்டுப் பன்றிகளை தடுக்க மின்வேலி அமைப்பது அவசியம் இல்லை. விவசாயிகளே கட்டுப்படுத்தலாம் என ஓர் உத்தரவை மத்திய அரசிடம் எதிர்பார்த்து இருக்கிறோம். பன்றிகளில் இருவகைகள் உள்ளன. பயிர்களை நாசமாக்கும் நாட்டு பன்றிகளை கொல்வதற்கு அனுமதி இருக்கிறது. காட்டு பன்றிகளைக் கொல்ல அனுமதி கேட்டு கடிதம் அனுப்பியுள்ளோம். உத்தரவு வந்தவுடன் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.