Published : 04 Oct 2016 01:46 PM
Last Updated : 04 Oct 2016 01:46 PM
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் நேற்று மத்திய அரசு தெரிவித்துள்ளது காவிரி டெல்டா விவசாயிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து காவிரி டெல்டாவின் கடைமடையில் உள்ள விவசாயிகள் விளக்குடி செல்வராஜ்,கீரக்களூர் சாமிநாதன், கட்டிமேடு சுப்பிரமணியன் ஆதிரெங்கம் ராஜேந்திரன், கொடியாளத்தூர் கண்ணன், தில்லைவிளாகம் சிவமூர்த்தி ஆகியோர் தங்களது மனக்குமுறல்கள் குறித்து, ‘தி இந்து’விடம் தெரிவித்தது:
கடந்த 5 ஆண்டாக குறுவை சாகுபடி செய்ய முடியவில்லை. குறுவை சாகுபடி செய்தபோது தீபாவளி போன்ற பண்டிகைகள், வீட்டு சுபகாரியங்கள், மருத்துவ செலவுகள், குழந்தைகளின் படிப்பு செலவு, கோயில் திருவிழா போன்ற பொது நிகழ்வுகளை தைரியமாக எதிர்கொண்டோம். குறுவை சாகுபடி செய்யாத 2012, 2013 ஆகிய முதல் இரண்டாண்டுகள் பாதிப்பு பெரிதாக தெரியவில்லை. அடுத்த இரண்டாண்டுகளில், சேமித்து வைத்திருந்த பொருளாதாரமெல்லாம் செலவாகிவிட்டது. தற்போது ஒருபோக சம்பா சாகுபடியை செய்வதற்கே கடன் பெறவேண்டிய நிலையில் உள்ளோம்.
இந்தாண்டு சம்பாவுக்காவது காவிரியில் காலத்தில் தண்ணீர் கொடுத்துவிடுவார்கள் என்ற நம்பிக்கையில் கடந்தமாத தொடக்கத்தில் மழை பெய்தபோது சிஆர்-1009 என்ற 150 நாள் நீண்டகால ரகத்தைத் தெளித்தோம். அதில் முளைத்த பயிர்கள் மழை இல்லாத நிலையில் கருகிவிட்டன.
அதே வயலை பலர் மீண்டும் உழவு செய்து, ஏடிடி-43 தெளித்து 15 நாட்களாகியும் இன்னும் முளைக்கவே இல்லை. கீரக்களூர் ராயநல்லூர் நத்தம், மேட்டுப்பாளையம், கொத்தமங்கலம், பூசலாங்குடி தொடங்கி திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை தலைஞாயிறு ஒன்றியம் முழுவதும் இதேநிலை உள்ளது.
இந்நிலையில் உச்ச நீதிமன்ற உத்தரவால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டுவிடும் என நம்பினோம். ஆனால், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் நேற்று மத்திய அரசு கூறியிருப்பதன் மூலம் தமிழகத்தை மத்திய அரசும் வஞ்சித்துவிட்டதை உணர்ந்து வேதனையாக உள்ளது.
அடுத்தாண்டு நடைபெறவுள்ள கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலை மனதில் வைத்தே மத்திய அரசு இந்த போக்கை கடைபிடிக்கிறது. சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்ததுதும் நாடாளுமன்றத் தேர்தல் வந்துவிடும். இப்படி தேர்தலை மையமாக வைத்தே மத்திய, மாநில அரசுகள் செயல்பட்டால் எங்களைப் போன்ற விவசாயிகளுக்கு என்னதான் கதி என்றே தெரியவில்லை. திருவாரூர், நாகை மாவட்டங்களில் கடைமடை விவசாயம் முற்றிலும் கேள்விக்குறியாகிவிட்டது என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT