காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் அதிகாரத்தை மறுப்பது சட்டவிதியைப் புறக்கணிப்பதாகும்: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு

காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் அதிகாரத்தை மறுப்பது சட்டவிதியைப் புறக்கணிப்பதாகும்: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு
Updated on
2 min read

காவிரி நதிநீர் தீர்ப்பாயத்தின் 2007 உத்தரவு மீது உச்ச நீதிமன்றம் தலையிட முடியாது என்ற மத்திய அரசின் நிலைப்பாட்டை கேள்விக்குட்படுத்தி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் எழுத்துபூர்வமாக தாக்கல் செய்துள்ளது.

காவிரி நதிநீர் தீர்ப்பாயத்திற்கு முற்றும் முழுதான, கட்டுப்பாடற்ற, வழிகாட்டுதல் ஏதுமற்ற நீதி அதிகாரம் அளிப்பது சட்ட விதியை புறக்கணிப்பதாகும் என்று தமிழகம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த எழுத்துபூர்வ சமர்ப்பிப்பில் தமிழக அரசு கேள்வி எழுப்பும்போது, மாநில ஆளுநர் போன்ற அரசமைப்பு சட்ட ரீதியான அதிகாரம் படைத்தோரின் முடிவுகளையே உச்ச நீதிமன்றம் மறு ஆய்வு செய்ய முடியும் போது, தீர்ப்பாயத்தின் முடிவை எதிர்த்து செய்யப்படும் மேல்முறையீடுகளை விசாரிக்க உச்ச நீதிமன்றத்தை எது தடுக்கிறது? என்று கேள்வி எழுப்பியுள்ளது.

வழக்கறிஞர்கள் ஜி.உமாபதி மற்றும் பி.பாலாஜி ஆகியோர் மூலம் தமிழக அரசு செய்திருந்த எழுத்து பூர்வ பத்திரத்தில், “சட்ட ரீதியான அமலாக்கங்கள் மட்டுமல்ல அரசியல்சாசன திருத்தங்களின் செல்லுபடித்தன்மையையே உச்ச நீதிமன்றம் ஆய்வு செய்ய முடியும் எனும் போது, 1956-ம் ஆண்டு சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட தீர்ப்பாயத்தின் முடிவுகளை நீதித்துறை மறு ஆய்வு செய்வதற்கான சட்ட உரிமையை அரசமைப்பு சட்டம் அமைத்தவர்கள் மறுத்துள்ளது புரிந்து கொள்ள முடியாததாக உள்ளது” என்று கடுமையாக கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

காவிரி நதிநீர்த் தீர்ப்பாயத்தின் 2007 உத்தரவை எதிர்த்து தமிழகம், கர்நாடகம், கேரள மாநிலங்கள் செய்து வரும் மேல்முறையீட்டு மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதை மத்திய அரசு கடுமையாக எதிர்த்து வருகிறது. அட்டர்னி ஜெனரல் முகுல் ரொஹாட்கி சட்டப்பிரிவு 262(3)-ன் கீழ் உச்ச நீதிமன்றம் தீர்ப்பாயத்தின் உத்தரவில் தலையிட முடியாது என்பதை சுட்டிக் காட்டி வாதாடினார்.

அதாவது தீர்ப்பாயத்தின் முடிவே இறுதியானது, உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அதிகாரம் அதற்கு உண்டு என்று வாதிட்டார் ரொஹாட்கி. எனவே மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார்.

ஆனால் இது குறித்து உத்தரவை தள்ளி வைத்த உச்ச நீதிமன்றம் தமிழகத்துக்கு கர்நாடகம் 2000 கன அடி தினசரி திறந்து விட உத்தரவிட்டது.

இந்நிலையில், “தீர்ப்பாயம் மூல தகராறு குறித்து தனது தீர்ப்பை வழங்கியுள்ளது. ஆனால் உச்ச நீதிமன்றம் சட்டபிரிவு 136-ன் படி மூலத் தகராறு குறித்து ஆய்வு செய்யவில்லை, மாறாக தீர்ப்பாயம் சட்டத்திற்கு இணங்க செயல்பட்டதா அல்லது இல்லையா என்பதைத்தான் ஆய்வு செய்கிறது. முந்தைய சட்ட வரம்புகள் முற்றிலும் வேறுபட்டது” என்று மத்திய அரசின் நிலைப்பாட்டை கேள்விக்குட்படுத்தியுள்ளது.

அதே போல் மத்திய நீர் ஆணைய தலைவர் ஜி.எஸ். ஜா தலைமை காவிரி உயர் தொழில்நுட்ப நிபுணர் குழுவின் காவிரி படுகை குறித்த ஆய்வு அறிக்கை மீதான ஆட்சேபணைகளையும் பதிவு செய்துள்ளது.

”குழு அதிகாரபூர்வமற்ற திட்டங்களை பார்வையிடவுமில்லை, கர்நாடக அரசு அவர்களுக்கு அதனை காண்பிக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளவில்லை. காவிரி நீர்ப்படுகையில் உள்ள 48 தாலுக்காக்களில் 42 தாலுக்காக்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டது என்பதை தமிழகம் ஏற்கவில்லை.

அக்டோபர் 13-ம் தேதி நிலவரப்படி மேட்டூர் அணையில் பயன்படுத்தக்கூடிய நீரின் அளவு 26.66 TMC ft, மாறாக கர்நாடகாவின் 4 முக்கிய நீர்த்தேக்கங்களில் மொத்த நீரின் அளவு 32.12 TMC ft இதுவும் கர்நாடகா 85 TMC ft நீரை பாசனத்திற்காகவும் குடிநீருக்காகவும் பயன்படுத்தியது போக மீதமுள்ள நீரின் அளவாகும். தமிழகம் பாசனத்திற்காக 23.566 TMC ft.மட்டுமே பயன்படுத்துகிறது.

“நிபுணர் குழுவின் மதிப்பீட்டின்படி 2017 மே மாத முடிவில் கர்நாடகாவில் 89.16 TMC ft தண்ணீர் இருக்கும். இதே காலக்கட்டத்தில் கர்நாடக மாநில பயன்பாட்டுக்கு 47.62 டிஎம்சி தண்ணீர்தான் தேவைப்படும் மீதமுள்ள 41.54 டி.எம்.சி. தண்ணீர் தமிழகத்திற்கு திறந்து விடமுடியும்” என்று கூறியுள்ள தமிழகம் பாசனப் பருவம் ஜனவரி 17-ம் தேதி வரை சம்பா சாகுபடியைப் பாதுகாக்க தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுவதை உறுதி செய்ய வேண்டும்” என்று கோரியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in