

மது விற்பனை அதிகரிப்பதால் தமிழக அரசு மருத்துவமனைகளில் கல்லீரல் நோயாளிகள் எண் ணிக்கை ஒவ்வோர் ஆண்டும் அதிகரித்து வருகிறது. மதுரை அரசு மருத்துவமனையில் ஓராண்டில் மூன்று மடங்கு நோயாளிகள் அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
மது குடிப்பதால் கல்லீரல் பாதிக் கப்படும் என மருத்துவ உலகத் தால் எச்சரிக்கப்பட்டும் குடி நோயாளிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இளைய தலைமுறையினரும் உடல்நலனில் அக்கறையில்லாமலும், மதுவின் பாதிப்பை உணராமலும் கொண் டாட்டம் என்ற பெயரில் தற்போது மது குடிப்பதை ஒரு பொழுது போக்காகக் கொண்டிருக்கிறார் கள். வருமானத்துக்காக ஒரு புறம் டாஸ்மாக் கடைகள் மூலம் மது பாட்டில்களை விற்பதால் மற்றொருபுறம் அரசு மருத்துவ மனைகளில் மது குடிப்பதால் கல் லீரல் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
மதுரை அரசு மருத்துவமனை யில் 2014-ம் ஆண்டு 1,913 என்றிருந்த கல்லீரல் நோயாளிகள் எண்ணிக்கை 2015-ல் 3 மடங் காக அதிகரித்துள்ளது. இது போல், சென்னை உட்பட தமிழ கம் முழுவதும் அரசு மருத்துவ மனைகளில் மரணத்தோடு போராடும் கல்லீரல் நோயாளிகள் வருகை அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் பெறும் உரிமைச்சட்டம் மூலம் கிடைக்கப் பட்ட தகவல்கள் அடிப்படையில் நம்மிடம் பேசிய மதுரையை சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் ஆனந்தராஜ் கூறும்போது, “மதுரை அரசு மருத்துவமனையில் 2008-ம் ஆண்டு 1,234 கல்லீரல் உள்நோயாளிகள் சிகிச்சைக்கு வந்துள்ளனர்.
ஒவ்வோர் ஆண்டும் கல்லீரல் நோயாளிகள் வருகை அதிகரித்து 2015-ம் ஆண்டில் 5,623 நோயாளிகள் என்ற நிலையில் வந்து நிற்கிறது. நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து இருப்ப தற்கு ஏற்றார்போல், மருத்துவ நிபுணர்களும், மருத்துவ வசதி களும் மதுரை அரசு மருத்துவ மனையில் மேம்படுத்தப் படவில்லை. அதனால், கல்லீரல் நோய்க்கான சிகிச்சை தரம் கேள்விகுறியாகி உள்ளது.
மதுரை அருகே சிவகங்கை, தேனி அரசு மருத்துவக் கல்லூரிகள் இருந்தாலும், கல்லீரலுக்கான சிறப்பு சிகிச்சைப் பிரிவு, காக்ளி யர் இம்ப்ளான்ட் சர்ஜரி, உள் ளிட்ட உயிர் காக்கும் சிறப்பு சிகிச்சைப் பிரிவுகளும் மருத்துவ வசதிகளும் இல்லாத நிலையில் பெயரளவுக்கே உள்ளன.
மக்கள் உயிரை பணயம் வைத்து டாஸ்மாக் வருமானம்தான் பிரதானம் என அரசு கருதக்கூடாது. முதற்கட்டமாக 500 டாஸ்மாக் கடைகள் மூடல் என்றதோடு அரசு நின்றுவிட்டது. ஒருசில டாஸ்மாக் கடைகளை மூடுவதால் மட்டுமே குடிநோயாளிகள் எண்ணிக்கையை குறைத்துவிட முடியாது” என்றார்.
அரசு மருத்துவமனைகளில் சிறப்புப் பிரிவு
ஆனந்தராஜ் மேலும் கூறும்போது, “தமிழகம் முழுவதும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்டத் தலைமை மருத்துவமனைகளில் கல்லீரல் பாதிப்பு சிறப்பு சிகிச்சைப் பிரிவு (Gastroenterology dept) ஏற்படுத்த வேண்டும். குடியால் ஏற்படும் உடல்நிலை பாதிப்பு குறித்தும், மருத்துவ சிகிச்சை வசதிகள் குறித்தும் விரிவான ஆய்வை தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் நகரம், கிராம ஊராட்சிகளில் மேற்கொள்ள வேண்டும்” என்றார்.
மதுவால் கல்லீரல் புற்றுநோய் ஏற்படும்
அரசு மருத்துவக் கல்லூரி இரைப்பை, கல்லீரல், கணையம் பாதிப்பு சிறப்பு மருத்துவப் பிரிவு நிபுணர் டாக்டர் செல்வசேகரன் கூறும்போது, “மது குடிப்பதால் உறுதியாக கல்லீரல் பாதிக்கப்படும். 50 முதல் 60 சதவீதம் கல்லீரல் நோயாளிகளுக்கு, மது குடிப்பதாலேயே கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மது குடிப்பதால் கல்லீரல் 4 விதங்களில் பாதிக்கப்படுகிறது. ஆரம்பக்கட்டமாக கல்லீரலில் கொழுப்பு படிந்து பாதிப்பை ஏற்படுத்துகிறது. இரண்டாம்கட்டமாக கல்லீரலில் இருக்கும் செல்கள் பாதிக்கப்படுகிறன.
மூன்றாம்கட்டமாக கல்லீரல் சுருங்கி கல்லீரல் சுருக்க நோய் ஏற்படுகிறது. 4-வது கட்டமாக கல்லீரல் புற்றுநோய் ஏற்படுகிறது. அதனால், மது குடிப்பதை தவிர்ப்பதால் கல்லீரல் பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம்” என்றார்.