

கும்பகோணம் அருகே வேப்பத்தூரில் மீத்தேன் ஆய்வுக்கு வந்ததாகக் கருதி இயற்கை வளங்கள் குறித்து ஆய்வுக்கு வந்த வாகனத்தை விவசாயிகள் முற்றுகையிட்டதால், பணிகள் நிறுத்தப்பட்டன.
மத்திய அமைச்சகத்தின் கனிம வள ஆய்வு நிறுவனம், இந்தியா முழுவதும் 2.5 கிலோ மீட்டர் தொலைவு இடைவெளியில், ஆங் காங்கே நிலத்தில் 250 முதல் 300 மீட்டர் ஆழத்துக்கு 2 அங்குல அளவில் ஆழ்குழாய்களை அமைத்து இயற்கை வளங்கள் குறித்து ஆய்வுசெய்து அறிக்கை அனுப்பி வருகிறது. அதன்படி, தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாள் வட்டாரத்தில் உக்கரை, சேங்கனூர் உள்ளிட்ட இடங்களில் மண் ஆய்வு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், வேப்பத்தூரில் தனியார் நிலத்தில் ஆய்வு மேற்கொள்ள ஏற்கெனவே அனுமதி பெற்ற நிலையில், ஆழ்குழாய் அமைப்பதற்காக மோட்டார் பொருத்தப்பட்ட கனரக வாகனங்களுடன் நேற்று முன்தினம் மாலை கனிமவள ஆய்வு நிறு வனத்தினர் வந்தனர். பணியைத் தொடங்கிய சத்தம் கேட்டதும், அப்பகுதி விவசாயிகள் மீத்தேன் எடுப்பதற்காக ஓஎன்ஜிசி நிறுவனத்தினர் திட்டமிட்டு வந்துள்ள தாகக் கருதி, வாகனங்களை முற்றுகையிட்டனர். இதனால், பணிகள் நிறுத்தப்பட்டன.
தகவல் அறிந்த மண்டல துணை வட்டாட்சியர் மாதேஸ்வரி, கிராம நிர்வாக அலுவலர் கார்த்தி, திருவிடைமருதூர் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் அங்கு வந்தனர். அப்போது, மண் ஆய்வு செய்ய வந்த கனிமவள ஆய்வு நிறுவன மேலாளர் கண்ணுசாமி, தங்களது ஆய்வு குறித்து அரசு அலுவலர்களிடமும், விவசாயி களிடமும் விளக்கம் அளித்தார். அவரது விளக்கத்தை விவசாயிகள் ஏற்காததால், ஆய்வுப் பணியை கைவிட்டு, தாங்கள் கொண்டுவந்த வாகனங்களுடன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.
இதுகுறித்து கண்ணுசாமி கூறும்போது, “எங்கள் துறை சார்பில் இந்தியா முழுவதும் மண் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். தஞ்சாவூர் மாவட்டத்தில் 6-வது ஆழ்குழாய் அமைக்க வேப்பத்தூருக்கு வந்தோம். சுமார் 300 மீட்டர் வரை 2 இஞ்ச் பைப் செலுத்தி, அதில் இயற்கை வளங்கள் ஏதேனும் உள்ளதா என்பதை ஆய்வு செய்வோம். இதனால் பொது மக்களுக்கோ, விளைநிலத்துக்கோ எந்தவித பாதிப்பும் ஏற்படாது” என்றார்.